‘விபஸன்னா’ பகுப்புக்கான தொகுப்பு

*நட்சத்திரம்* – விபஸன்னா – வாழும் கலைப்பயிற்சி

விபஸன்னா(Vipassanna): வாழும் கலை பயிற்சி.

நண்பர்களே இந்த பதிவு விபஸ்ன்னா என்னும் வாழும் கலைப் பயிற்சியைப் பற்றியது. இந்த பயிற்ச்சியை நான் 2002 ஆம் ஆண்டு மேற்கொண்டேன்.இந்த தியான முறை பற்றியும், அதைப் பற்றியான எனது அனுபவங்களையும் கலந்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இது மிகப்பழமையான தியான முறை அல்லது வாழும் கலை பயிற்சி முறை. புத்தர் ஞானம் பெற்ற தியான முறை இது.

இங்கு ஒரு விசயத்தை மனதில் கொள்ள வேண்டும். புத்தர் என்பது ஒரு தனிப்பட்ட மனிதரை குறிப்பது இல்லை. ஞானம் பெற்றவர்கள் அனைவரும் புத்தர்கள்என்றே அழைக்கப்படுகின்றர். நாம் இப்போது புத்தர் என்று வழிபடுபவர் இந்த முறையில் வந்த ஒருவர். அவருக்கு முன்னும் பின்னும் புத்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.இது முறையாக குருக்களால் கற்பிக்கபட்டு ஒரு தொடர் சங்கிலியாய் இன்றும் தொடர்கிறது. இடையில் பல காலம் இந்தியா இந்த முறையை மறந்திருந்த போதும்,இந்தியர்கள் பரவிக்கிடந்த பர்மா நாட்டில் தொடர்ந்து பயிற்றுவிக்கப்பட்டு அழியாமல் காத்து வரப்பட்டது. வரப்படுகிறது. இதுதிரு S.N.கோயங்கா என்பவரால் இந்தியாவில்மறு அறிமுகம் செய்யப்பட்டு பல இடங்களில் இந்த வாழும் கலை பயிற்சி பயிற்றுவிக்கப்படுகிறது.
இது குறித்த அனைத்து விளக்கங்களும் இங்கு
நான் இங்கு என் புரிதல்களோடு அதை பகிர்ந்து கொள்கிறேன்.

விபஸ்ன்னா என்பது பாலி மொழிச் சொல். passanna என்றால் வழக்கமான முறையில் கண்களை திறந்து பார்ப்பது, Vipassanna என்றால் நிகழ்வுகளை அதன் உண்மை வடிவிலேயே பார்த்தல்அது எப்படி தோன்றுவது என்று இல்லாமல் அது என்னவாக இருக்கிறது என்று தேடிப் பார்த்தல், உடல் மனங்களின் உண்மையான நிலையை பார்த்தல்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால்,

விருப்பு, வெறுப்புகளுக்கு ஆட்படாமல் நமக்குள் நடக்கும் நிகழ்வுகளை ஒரு மூன்றாம் மனிதனாக கவனிப்பது, பழைய நிகழ்வுகளை வெளியேற்றுவது.

மனித மனம் என்பது நன்மை தீமைகளை தனக்குள் புதைத்து வைத்திருக்கிறது. இவைகளை சம்பந்தபட்டவர்களின் இன்ப துன்பத்திற்கு காரணமாக அமைகிறது.ஒரு மனிதன் தான் எப்படி இருக்கிறனோ அது மாதிரியே தன் சூழலையும் ஆக்கிவிடுகிறான். கோபமாக, வெறுப்பாக, அமைதியற்றவனாக துன்புறபுவனாக எனஎப்படி இருக்கிறானோ அப்படியே அவனைச் சுற்றியும் ஆக்கிவிடுகிறான். இதைக் கொண்டுதான் அந்த காலத்திலேயே நல்லதை நினை, நல்லதை பேசு, நல்லதை செய் என்றுசொல்லி இருக்கிறார்கள்.

மனிதனுடைய இந்த தீயகுணநலன்கள் அவனுக்குள் கடுமையான துயரத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதை எப்படி சரி செய்வது? அதற்குதான் இந்த பயிற்சி விடை சொல்கிறது.

இந்த பயிற்ச்சியின் நோக்கம் – ஒரு சமமான மனநிலையை உருவாக்குவது. பழைய விருப்பு வெறுப்பு எண்ணங்களை மேலே கொண்டு வந்து அவைகளை நம் மனத்திலிருந்து நீக்குவது

மனதனுக்கும் உலகிற்கும் இருக்கும் ஒரே தொடர்பு காற்று.

அந்த காற்று முறையாக போய் வரும் வரை அவன் மனிதன். உயிருள்ளவன். காற்று போய் வர இயலாத போதுஅவன் மரணித்து விடுகிறான். இந்த உலகத்துக்கும் அவனுக்குமான தொடர்பு இல்லாமல் போய் விடுகிறது. எனவே மனிதனுக்கு உரிமையான காற்றை கொண்டே அவனுடைய உண்மையான நிலையை அறிய முனைவதுதான் இப்பயிற்சி.

இந்த பயிற்சி மேற்கொள்ள ஐந்து இன்றியமையாத கட்டுபாடுகளை கடைபிடிக்கவேண்டும். அவை

1. பேசாதிருத்தல் – வாயால் மற்றும் உடலால்(கண்களால் பேசுதல் முதலியன)
2. எந்த சிறு உயிரையும் கொல்லாதிருத்தல்
3. திருடாதிருத்தல்
4. பாலுறவு கொல்லாதிருத்தல்
5. பொய் சொல்லாதிருத்தல்.

முதல் விதியைப் பார்த்தவுடனேயே எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இது நம்மால முடியாது. பத்துநாளைக்கு பேசாமா இருக்கிறதா? விளையாட்டா?என்றுதான் நினைத்திருந்தேன். இத்தனைக்கும் நான் இந்த பயிற்சி வகுப்பிற்கு சென்றிருந்தது எனது நெருங்கிய தோழனோடு.ஆனால் பத்து நாட்களும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

நம் வாழ்வில் நாம் எப்போதும் பிறருடன் மட்டுமே பேசி வாழ்கிறோம். தனக்குள் பேசுவது இல்லை அல்லது குறைவு. ஏனென்றால் இன்றைய வாழ்க்கை சூழல் அப்படி.நிர்ணயிக்கப்ப்பட்ட ஒரு வித சுழற்சியோடு வாழ்க்கைச் சக்கரம் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த இயந்திரத்தனத்தில் தனக்குள் பேசுதல் என்பது இயலாத காரணம்.ஆனால் இந்த பயிற்சி ஒருவன் தனக்குள் பேசுவதற்கான சூழலை ஏற்படுத்தி தருகிறது. அதன் மூலம் அவன் தன்னை யார் என்று உணர வாய்ப்பு ஏற்படுகிறது.

நான் இந்த பயிற்சி பெற்றது தம்மாசேது-சென்னை,

சென்னையில் திருமுடிவாக்கம் ன்னுமிடத்தில் அமைந்திருக்கிறது. பல்லாவரத்திலிருந்து மேற்கே ஒரு 10 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது.சென்னைக்குள் இருக்கும் ஒரு கிராமம் அது. போகும் வழியில் திருநீர்மலை. அடுத்து சிப்காட் தொழிற்பேட்டை. தொழிற்பேட்டையை கொஞ்சம் தாண்டிப் போனால் வயக்காட்டிற்குள் அமைந்திருக்கிறது தம்மாசேது. மிகப்பெரிய இடம். ஆண்கள் பெண்கள் தங்குவதற்கு தனித்தனியான அறைகள், அறை ஒன்றிற்கு இருவர் எனும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது.அறை எல்லா வகையான வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கொசுத்தொல்லையில்லிருந்து காத்து கொள்ள ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனி கொசுவலைகள். மெத்தை,தலையணை என தேவையான அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறார்கள்.மொத்தம் பன்னிரண்டு நாட்கள் , பயிற்சி பத்து நாட்கள், பயிற்சிக்கு முந்தைய நாள் மதியத்திற்கு மேல் அங்கு செல்ல வேண்டும்மாலையில் ஒவொருவருக்கும் அவரவருக்குரிய அறைகள் ஒதுக்கப்ட்டு அறைச்சாவி கொடுக்கபட்டது. எல்லோரும் அறைக்கு சென்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்பு அன்றை மாலையில் ஒரு அமர்வு.இந்த பயிற்ச்சியைப் பற்றி, பயிற்ச்சியின் போது பின்பற்ற வேண்டிய முறைகள் பற்றி தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்டது. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் பயிற்சி. அதில் மூன்று முறை கூட்டுத் தியான வகுப்புகள்.

முதலிலேயே தெளிவாக அறிவித்து விட்டார்கள். இந்த பயிற்சி எந்த மதச் சார்பும் உடையது அல்ல. இந்த பயிற்சி செய்வதினால் யாரும் அவரவர்நம்பிக்கைகளை மாற்றி கொள்ளத் தேவையில்லை. உங்கள் நம்பிக்கைகளை ஒரு பத்து தினங்களுக்கு ஒதுக்கி வைத்து விட்டு, அதாவது அது தொடர்பான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துஇந்த பயிற்சியை பின்பற்றுங்கள். பின்பு இந்த பயிற்சியைத் தொடர்வது உங்களுடைய விருப்பம். ஆனால் எந்த நம்பிக்கையையும் இந்த பயிற்ச்சியோடுபோட்டு குழப்பி கொள்ளாதீர்கள், எந்த இலக்கும் வைத்து பயிற்ச்சியில் ஈடுபடாதீர்கள், ஏதேனும் ஒன்றை மனதில் நினைத்து அதை நோக்கி பயணிக்காதீர்கள் என்று தெளிவாக கூறிவிட்டார்கள். நான் அமரும் போது நினைத்து கொண்டது மெய்ஜோதியை எப்படியும் அடைவது என்பதே.

இந்த பயிற்சி மனதை ஒருமுகப்படுத்துவதற்காக மட்டும் அல்ல. மனதை ஒருமுகப்படுத்துவதென்பது இதில் ஒரு சிறு நிகழ்வே. அதைக் கொண்டு நம் பழைய சம்ஹாரங்களை எல்லாம் வெளியில் கொண்டுவந்து அதன் நன்மை தீமைகளைஎல்லாம் அப்புறப்படுத்தி, மனதை ஒரு சமமானதாக மெய்யானதாக்கத்தான். அதாவது ஞானம் பெறுவதுதான். ஞானத்தை அடைய இந்த பயிற்சி ஒரு தொடக்க நிலை அல்லது முதல் அடி அவ்வளவுதான். தொடர்ச்சியான பயிற்ச்சியின் மூலமே இதனை அடைய முடியும்.

பயிற்ச்சி கடினமானது. ஆமாம் நம் சுவாசத்தை நாம் கவனிக்க வேண்டும். அது எப்படி உள் செல்கிறது, எப்படி வெளிச் செல்கிரது என்பதை உணர வேண்டும். அதற்காக நமது முகத்தில் மிகச்சிறிய பகுதியில் நம் கவனத்தை குவிக்கவேண்டும்.எடுத்துகாட்டாக மூக்கிற்கும் மேலுதட்டிற்கும் இடைப்பட்ட முக்கோணம். முதலில் மிகத் தடுமாற்றமாகத்தான் ஒருந்தது. மனசு எவ்வளவு தூரம் அலை பாய்கிறது என்பதை அப்போதுதான் உணர முடிந்தது. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி என்பதால் மெல்ல மெல்ல சுவாசத்தைஉணர முடிந்தது. இங்கு குறீப்பிடத்தக்கது நம்மால் உணரமுடியாவிட்டாலும் வருந்தக்கூடாது. தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறாக முகம் முழுவதும் உணர வேண்டும்.
இந்த பயிற்சியின் தத்துவமே மனித உடலே நுண்ணிய காற்று முடிச்சுகளால் ஆனது. அதன் பண்பு தோன்றி மறைவது. நாம் அந்த தோன்றி மறைவதை உணர வேண்டும். அதன் மீதுநமது வினைகளை ஏற்றாமல் ஒரு மூன்றாம் மனிதனாக கவனிக்க வேண்டும்.

பயிற்ச்சி தொடங்கி 3ம் நாள் மதியம் 3 -5 வரை முதல் கூட்டுதியானம். இந்த தியானத்தின் போது உடலை ஆடாமல் அசையாமல் வைத்து சுவாசப்பயிற்ச்சி செய்ய வேண்டும். இப்போது முகத்திலிருந்துஉடலின் மற்ற பாகங்களிலும் இதை உணரும் பயிற்சி கற்பிக்கப்படுகிறது. இந்த அமர்வுக்கு அதிட்டானம் என்று பெயர். அதிலிருந்துஅடுத்த ஆறு நாட்களுக்கும் இந்த பயிற்சிதான். உடல் முழுவதும் காற்றின் முடிச்சுகளை நாம் உணர உணர எலும்புகளை ஊடுருவி அவை செல்வதை உணர முடியும். நம் உடம்புக்குள் ஒரு free flow ஆக காற்று போய் வருவதை உணரமுடியும்.என்னால் 8 வது நாள்தான் ஒரளவிற்கு அதுமாதிரியான அனுபவம் கிடைத்தது.

பயிற்சி நேரங்கள்:
காலை 4.30 லிருந்து 6.30 வரை – தியானப் பயிற்சி
காலை 6.30லிருந்து 8.00 வரை காலைச்சிற்றுண்டி +ஓய்வுகாலை
8.00 லிருந்து 9.00 வரை கூட்டுத் தியானம்
9.00லிருந்து 9.05 சிறு இடைவெளி
9.05 லிருந்து 11.00 மணி வரை – தியான பயிற்சி( இடைவேளைகள் அவரவர் விருப்பம் போல)
நண்பகல்11.00லிருந்து 1 மனி வரை – மதிய உணவு, இடைவேளை
மதியம் 1.00 லிருந்து 3 மணி வரை – தியானம் ( இடைவேளைகள் அவரவர் விருப்பம் போல)
மதியம் 4.00லிருந்து 5 மணி வரை – கூட்டுத் தியானம்
மாலை 5.00லிருந்து 6 வரை- தேனீர் இடைவேளை
மாலை 6.00லிருந்து 7.30 வரை – தியானப் பயிற்சி
7.30 -8.00 வரை கோயங்காவின் தம்ம பேருரை

சென்னை முகவரி:

Vipassana Meditation Centre,
Dhamma Setu 533 Pazhan Thandalam Road,
Thiruneermalai Via, Thirumudivakkam
Chennai 600 044. India
Ph : +91-44-24780953
Email Id : dhammasetu@vsnl.net
Web site : http://www.dhammasetu.org/

இந்த பயிற்சி முறையான ஆசிரியர் துணை கொண்டே கற்க வேண்டுமென்பதாலே நான் மேலெலுந்த வாரியாக சொல்லியிருக்கிறேன்.
நான் சொன்னது எல்லாம் என் நினைவில் இருந்த செய்திகளை வைத்துதான்.
இதில் தவறுகளோ, தகவல் பிழைகளோ இருக்கலாம். சுட்டிக் காட்டினால் நான் அதை திருத்தி கொள்வேன்.

மேலும் அவர்களின் வலைதளத்திற்கு சென்று இதைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இதைப் பற்றி மேலதிக விபரம் அறிந்தவர்கள் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்

அன்புடன்
முத்துகுமரன்.

பி.கு:
விபஸன்னாவை பற்றி எழுத வேண்டுமென்றால் அது மிக நீண்ட பதிவாகி விடும். அதற்கான நேரம் இப்போது இல்லை. அதனால் மிகச் சுருக்கமாக சொல்ல முயற்ச்சித்திருக்கிறேன்.

நான் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்யவில்லை. காரணம் எல்லாவற்றையும் ஒட்டுதல் இன்றி என்னால் பார்க்க முடியவில்லை. குறிப்பாக பெற்றோரிடம்.

அவர்களோடு நான் என்றும் சமநிலையில் இருக்க விரும்பவில்லை. அவர்களின் பாசத்தை உணர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்தான் தொடரவில்லை. மெய்ஞானத்தை விட என் பெற்றோரின் மீதான அன்புதான் எனக்கு முக்கியமாகப் பட்டது. அவ்வப்போது ஒரு உடற்பயிற்சி மாதிரி மட்டும் செய்வதுண்டு.