‘பதிவர் வட்டம்’ பகுப்புக்கான தொகுப்பு

மதுரை வலைப்பதிவர் கூடல் – 29.07.2007

மதுரை வலைப்பதிவர் கூடல் – 29.07.2007.

சென்னை, கோவை, பெங்களூர், அமீரகம், அமெரிக்கா என பதிவர் சந்திப்புகளும், பதிவர் பட்டறைகளும் நடைபெற்று வருவது மகிழ்ச்சியான ஒன்று. வலைப்பதிவுகள் சரியான மாற்று ஊடகமாக வளர இது போன்ற ஒன்றுகூடல்களும் கூட்டு முயற்சிகளுமே துணை புரிகின்றன. அனைவரும் ஆகஸ்ட் 5 தேதி சென்னையில் நடக்கும் பதிவர் பட்டறையை பற்றி அறிந்திருப்பீர்கள். அதற்கு முன்பாக வருகிற 29ஆம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை மதுரையில் வலைப்பதிவர் சந்திப்பு ஒன்று தருமி அவர்களின் ஒருங்கிணைப்பில் நடக்கவிருக்கிறது. மதுரை மற்றும் தென் தமிழ்நாட்டை சேர்ந்த பதிவர்களை சந்தித்து உரையாட வாய்ப்பாக இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அன்று மதுரை வரக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து வலைப்பதிவர்களையும் கட்டாயம் வாருங்கள் என் அன்புடன் அழைக்கிறேன்.

மதுரை வலைப்பதிவர் கூடல்

நாள்: 29.07.2007
நேரம்: மாலை 4மணி முதல் 7 மணி வரை
இடம் அமெரிக்கன் கல்லூரி, தமிழ்த்துறை அருகே உள்ள சிறிய கூடம்

அமெரிக்கென் கல்லூரி வரைபடம்.

1.அமெரிக்கன் கல்லூரி முகப்பு

முகப்பிலிருந்து நேராக வந்து வலது புறம் திரும்ப வேண்டும்

10. சந்திப்பு நடைபெறும் தமிழ்துறை கட்டிடம்

நிகழ்வில் கலந்து கொள்ளவிரும்பும் நண்பர்கள் நிகழ்ச்சி நிரல் குறித்தான ஆலோசனைகளையும் பதிவிலோ அல்லது தனிமடலிலோ தொடர்பு கொண்டால் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற ஏதுவாக இருக்கும்.

*
பி.கு: வேற ஒன்னும் இல்லை மக்கா வரும் 27ம்தேதி விடுமுறைக்கு ஊருக்கு வர்றேன்.

வலைப்பூ ஆய்விற்காக – என்னைப் பற்றி கொஞ்சம்

வலைப்பதிவர் பெயர்:முத்துகுமரன்

வலைப்பூ பெயர் : முத்துகுமரன், என் பார்வையில்

சுட்டி(url) : www.muthukumaran1980.blogspot.com ; www.eenpaarvaiyil.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: துபாய் தற்சமயம். சொந்த ஊர் மதுரை
நாடு:தமிழ்நாடு
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நண்பன்
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
முத்துகுமரன் – ஜூன் 25 2005
என் பார்வையில் – அக்டோபர் 21 2005

இது எத்தனையாவது பதிவு: 76
இப்பதிவின் சுட்டி(url): http://muthukumaran1980.blogspot.com/2006/06/blog-post.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என் எண்ணங்களை, கவிதைகளை வெளிப்படுத்த.
சந்தித்த அனுபவங்கள்: பலதரப்பட்ட மனிதர்களும், அவர்கள் குணங்களும்,
பெற்ற நண்பர்கள்: நேரில் காணாவிடினும் நெருங்கிய உறவுகள் போன்று கிடைத்திருக்கும் நண்பர்களும், ஒத்த சிந்தனையுடைய நண்பர்களும், மாற்றுச் சிந்தைனையிருபினும் பண்போடு பழகும் நண்பர்களும் என நிறைவான நண்பர்கள்.
கற்றவை: கற்றது கொஞ்சமே. கற்க வேண்டியிருப்பது நிறைய.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எனக்குள் தோன்றும் எண்ணங்களை சிந்தனைகளை சுயதணிக்கைக்குப்பிறகு எந்த வித தடையுமின்றி வெளிப்படுத்த வாய்ப்பிருப்பதே மிகப்பெரிய சுதந்திரம்தான்.
கிடைத்த சுதந்தரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதிலும் கவனம் கொண்டிருக்கிறேன்.

இனி செய்ய நினைப்பவை: சமூகத்திற்கு பயன்படத்தக்க வகையில் வாழ்க்கையை அமைத்துகொள்ள வேண்டும்
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
வீட்டிற்கு மூத்தவன், பிறந்தது பின்பு பெரும்பகுதி வளர்ந்தது திருவரங்கம் என்றாலும் எப்போதும் மதுரைக்காரனாகவே உணர்பவன். படித்தது பொறியியல். பணிபுரிவது அமீரகத்தின் துபாயில். தமிழ் மீதும் தமிழ்ச் சமூகத்தின் மீதும் பற்று கொண்டிருப்பவன். கவிதைகளில் ஆர்வமுடையவன். விரைவில் முதல்கவிதைத் தொகுப்பு ”தமிழ்அலை’‘ வெளியீடாக விரைவில் வர இருக்கிறது.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
பெரியாரை நோக்கி என்னைத் திருப்பிய பேராசிரியர்.சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு எனது நன்றிகள்.

முத்துக்கள் நான்கு

சங்கிலிப்பதிவு மாலையில் இந்த முத்துவை கோர்த்துவிட்ட ஜோ அவர்களுக்கு நன்றி. இந்த விளையாட்டு ஆரம்பித்தவுடனேயே நான் எந்தப்பக்கம் இருந்து கொக்கி வரும் என்று யோசித்து ஒரு நான்கு பேரை குறித்து வைத்திருந்தேன். முதல் ஆளே கூப்பிட்டு விட்டார்.:-) அவருக்கு நன்றி.

பிடித்த நான்கு விசயம்:

அரசியல்: நான் மட்டும் விதிவிலக்கா என்ன. எனக்கு மிகவும் பிடித்த விசயம் அரசியல். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த கூடியது இது. அதனால் ஒதுங்கிப் போகாமல் உள்ளே குதித்துவிடுவதுதான் நல்லது. அரசியல் தொடர்பான விவாதங்கள் மிகச் சுவையாக இருக்கும். பேச்சுத்திறனை வளர்க்க இது ஒரு சிறப்பான வழி.

கவிதை: எனக்குள் முதன்முதலில் ஒரு பெருமித உணர்வைத் தந்தது கவிதை. முதல் கவிதை எழுதி முடித்த போது ஏதோ சாதனை நிகழ்த்தியது போன்றதொரு உணர்வு. நமது எண்ணங்களை சிந்தனைகளை பதிவு செய்துகொள்ள வாய்த்திருக்கிற அற்புதமான வடிவம். எல்லா விதமான கவிதைகளும் பிடிக்கும். சமூகம் சார்ந்த கவிதைகளில் கவிஞனின் குரலாய் கவிதை இருக்க வேண்டுமே தவிர புனைவாக இருப்பதில் ஒப்புமை இல்லை.

கிரிக்கெட்: கிரிக்கெட் கிறுக்குப் பிடித்த கோடானு கோடி இந்திய திருமகன்களில் அடியேனும் ஒருவன். தோல்வி அடைந்து விடுவோம் என்று தெரிந்த ஆட்டங்களை கூட கடைசி பந்து வரை பார்க்கும் ஆள். கூட்டு முயற்ச்சிக்கும் இறுதி வரைக்கும் போராடக்கூடிய எண்ணத்திற்கும் இது ஒரு வினையூக்கி. கல்லூரியில் மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் இல்லாத எங்கள் அணி பலமுறை வெல்லக்காரணமாக இருந்தது கூட்டு முயற்ச்சியும் போராட்ட குணமும்தான்.

காதல் & திருமணம்: மனித வாழ்வின் மிக முக்கியமான உணர்வு மட்டும் உறவு. இதன் மேல் எப்போதும் ஒரு மயக்கமுண்டு. உன்னை விரும்பக்கூடிய இதயத்திற்கு சொந்தக்கரானாய் இருப்பதே மாபெரும் சாதனை என்பேன். அதே போல் இறுதி மூச்சிருக்கும் வரை இணைந்திருக்கும் திருமண உறவு அழகான ஒன்று.
(மனசாட்சியின் பாடல்:
காதலிக்க நேரமில்லை
காதலிப்பார் யாரும் இல்லை
வாலிபத்தில் காதலிக்க வழியுமில்லை…

அதுனால கல்யாணம் பண்ணிக்க போற ஆளையே காதலிச்சுக்கலாம்னு முடிவு பண்ணி வச்சிருக்கேன்:-)))))) )

பிடித்த நான்கு தலைவர்கள்:

நேதாஜி: தேச விடுதலைக்காக வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தியவர். இவரது தலைமையில் சுதந்திரப்போராட்டத்தை நாம் எதிர்கொண்டிருந்தால் நமது இன்றைய பல துயரங்கள் வராமலே இருந்திருக்கும்.

டாக்டர். அம்பேத்கார்: தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தவர். இந்த சட்ட மேதை மட்டுமரசியல் நிர்ணய சபையில் இல்லாதிருந்தால் இந்தியா இன்று இந்துத்துவ நாடாகி இருந்திருக்கும்.

தந்தைப் பெரியார்: வாழ்நாள் முழுவதும் தமிழர் நலனுக்காகவே சிந்தித்து செயலாற்றிய பெரிய மனிதர். தமிழன் முன்னேற்றத்திற்கு தடையாக எது வந்தாலும் அது தமிழாக இருந்தாலும் சரி ஆன்மீகமாக இருந்தாலும் சரி அதை தூக்கி எறி என்று சொன்ன மாவீரன்.

முத்துலெட்சுமி அம்மையார்: தேவதாசி முறையை ஒழிக்க பாடுபட்டவர்

மோசமான தலைவர்கள்:

மகாத்மா காந்தி
சர்தார் வல்லபாய் பட்டேல்
ராஜாஜி

பிடித்த திரைப்படத்துறையினர்:
கண்ணதாசன்
மொட்டை@ இளையராஜா
இயக்குநர். பாலா
ரஜினிகாந்த். ( நடிப்பு மட்டும், அரசியலில் அல்ல)

மீண்டும் மீண்டும் பார்த்த திரைப்படங்கள்.
1.காதல் ஓவியம்
2. முதல் மரியாதை
3. காதலுக்கு மரியாதை
4. சேது

நான் வசித்த நான்கு இடங்கள்:
பள்ள பட்டி, கரூர் – 7 ம் வகுப்பு வரை
திருவரங்கம் – 12ம் வகுப்பு வரை
தர்மபுரி- கல்லூரி முடிய
துபாய்- தற்போதய நொடி வரை

எனக்குப் பிடித்த நான்கு உணவு:

சோறு + ரசம் + உருளைக்கிழங்கு பொறியல்
பழைய சோறு + சின்ன வெங்காயம்
வெண் பொங்கல் + சாம்பார்
கோழி வறுவல்

நான் தினமும் பார்வையிடும் இணையதளம்:

1. தமிழ் மணம்
2. ஜி.மெயில்
3. கூகுள்
4. என்னுடைய வலைப்பூ

நான் அழைக்க விரும்பும் நான்கு முத்துகள்:
1. அப்படிப் போடு
2. மதுமிதா அக்கா
3. J.S. ஞான சேகர்
4. பொட்டீக்கடை ”சத்யா”
*அழைக்க நினைத்த சிவாவையும், பரஞ்சோதியையும் முன்பே அழைத்த ராகவனுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.:-))))))))))))))*

எனக்கு பிடித்த வலைப்பூக்கள்

என் பெயரை பரிந்துரைத்த அப்பிடிபோடு(மரம்) அவர்களுக்கும், எனக்கு அந்த செய்தியைத் தெரியப்படுத்திய மதி கந்தசாமி அவர்களுக்கும் எனது நன்றி.

நான் தீவிரமாக வலைப்பதிவுகளில் பங்கு பெறுவது கடந்த ஒரு மாதமாகத்தான். அதனால் நிறைய பேருடையதை வாசிக்கவில்லை. வாசித்தவைகளில் என் மனதிற்கு பிடித்த மூன்று பதிவுகளை இங்கு குறிப்பிடுகிறேன்…

1. பரஞ்சோதியின் சிறுவர் பூங்கா:
தன் மேல் வெளிச்ச வட்டம் விழ வேண்டும் என்று துடிப்போடு இணையத்தில் இயங்கி வருகிற பலருக்கு மத்தியில் மெல்லிய நதியாய் சலனமில்லாமல் பயணத்தை தொடர்ந்து கொண்ட வலைப்பூ இது. விதைக்கின்ற ஒரு நல்ல விதை நிச்சயம் நல்ல பலனைத் தரும். அது போலத்தான் குழந்தைகள் வளர்ப்பும். அன்பையையும், சகோதரத்துவத்தையும் குழந்தைகளிடம் நாம் விதைத்தால் அது பிற்காலத்தில் உலகை அமைதி வனமாக்கி காட்டும். எளிய கதைகள், கதைகளின் வாயிலாக நீதிகள் என தேனைக் கலந்து தருகிறார். குழந்தைகளுக்கான இதுவும் இலக்கியமே. இன்னும் சித்திர கதைகள் படங்கள் எனத் தந்தால் குழந்தைகளை எளிமையாக கவரும். குழந்தைகள் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை பரஞ்சோதி தொடுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

2. சிவாவின் கீதம் சங்கீதம்:
ஓய்வு எல்லோருக்கும் பிடித்தமானது. பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தில் நம்மை நாமேதான் உற்சாகப்படுத்தி கொள்ள வேண்டி இருக்கிறது.
மரத்தின் நிழல் போல் வீசும் தென்றல் காற்று போல் நமக்குத் தேவையான மகிழ்வைத் தரக்கூடிய பொதுகுணங்கள் சிலவற்றிற்கு உண்டு. அதில் முதன்மையானது இசை. எந்த வித எல்லைகளுக்கும் சுருங்கி விடாதது இசை. கேட்கும் ஒலிகள் வேண்டுமானால் மனங்களுக்கு ஏற்ப வித்தியாசப்படலாம். ஒரு கலைஞனுக்கு சிறந்த ரசிகனாக இருப்பதும் ஒரு கலையே. அதிலும் ரசனையும், அதைப்பற்றிய அறிவும் இருந்து விட்டால் இன்னும் குதுகலமே. எனக்கு அதுமாதிரித்தான் இளையராஜாவின் இசை. அது எனக்கு பல சுகங்களை தந்திருக்கிறது. இளையராஜா இசை பிடிக்கும். அந்த இசை விரும்பும் எவரும் என் உள்வட்டத்திற்குள் வந்து விடுவதை என்னால் எப்போதுமே தவிர்க்க முடிவதில்லை. அந்த வகையில் சிவாவை எனக்கு நெருக்கமானவராகவே உணருகிறேன்….

3. ஆசிப் மீரான்:

சாத்தான்குளத்து வேதத்தை பற்றி இந்த பூதம் சொல்லித்தான் தெரிய வெண்டுமா என்ன? ஆளை கிறங்கடிக்கும் வட்டார நடை, அங்கதம் தொனிக்கும் சமூக பார்வை, தெளிவான சிந்தனை ஆழ்ந்த இலக்கிய அறிவு, அதை வெளிக்காட்டிக் கொள்ளா நிறை குடத் தன்மை என எழுதிக் கலக்கும் அன்பர், நண்பர். கை தேர்ந்த சிறுகதை எழுத்தாளர். இவரின் நல்லா இருங்கடேக்காகாவே ரசிகர்களாக இருப்பவர் பலரில் அடியேனும் ஒருவன். ஆனால் அப்பப்ப தலை மறைவாயிடுவது ஒன்றுதான் ஒரு குறை

இந்த மூவரும் இந்தபதிவுத்தேரை நகர்த்தி செல்ல கேட்டுக் கொள்கிறேன்

அன்புடன்
முத்துகுமரன்

(பி.கு. என் உடல்நலம் விசாரித்த அனைத்து நண்பர்களின் அன்புக்கு எனது நன்றிகள்.)