‘நாகம்மை’ பகுப்புக்கான தொகுப்பு

நாகம்மாள் மறைவு – எல்லாம் நன்மைக்கே

தமிழகத்தில் பெரியாரும் அவரது தாக்கம் இன்னும் குறையாதிருப்பது பலருக்கு எரிச்சலைத் தருகிறது/தந்துகொண்டிருக்கிறதும். மனிதனின் இயற்கையான கடவுள் பக்தியைக்கூட இன்று தங்கள் சுயநல உணர்வுகளுக்காக உருமாற்றுதலும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. பெரியாரைப் பற்றிய திரித்தல்களில் ஒன்று அவரது மனைவி இறந்த போது அவர் மகிழ்ந்தவர். அத்தகைய கீழான எண்ணம் கொண்டவர் என்று நிறுவ படாதபாடு படுகிறார்கள். நாகம்மையாரின் மறைவு பெரியாருக்கு எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் அவரரே பதிவு செய்திருக்கிறார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நாகம்மையார் மறைந்த மூன்று நாட்கள் கழித்து ”குடிஅரசில்” அவர் எழுதிய தலையங்கத்தின் சில பகுதிகள்..(14.5.33)

நாகம்மாள் மறைவு – எல்லாம் நன்மைக்கே..

”எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.33 தேதி ஆவி நீத்தார். நாகாம்மாளை நான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்திற்கு வரவில்லை…

நான் சுயநலவாழ்வில் ‘மைனராய்’, ‘காலியாய்’, ‘சீமானாக’, இருந்த காலத்திலும் பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் துறையின் முற்போக்குக்கும் நாகாம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தாள் என்பது மறுக்கமுடியாத காரியம். பெண்கள் சுதந்திர விஷயமாகவும் பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கின்றேனோ அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை..

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு வினாடியும் உணர்ந்தே வந்தேன். ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவுமே விளங்கவில்லையே.

நாகம்மாளை அற்ப ஆயுளென்று யாரும் சொல்லிவிட முடியாது. அவருக்கு 48 வயது ஆனபோதிலும் அது இந்திய மக்களின் சராசரி வாழ்நாளாகிய 23.5 வயதிற்கு இரட்டிப்பென்றே சொல்ல வேண்டும். நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும், ஒரு கஷ்ட சம்பவமாகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும், லாபமாகவும் கருத வேண்டுமென்றே நான் ஆசைப்படுகிறேன்

”— கடந்த 2,3 வருசங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும்( சங்கரச்சாரிகள் போல – ஆனால் அவ்வளவு ஆடம்பரத்துடன் பணவசூலுக்கல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப்பயணத்திலேயே இருக்கவேண்டும் என்றும், நமக்கென்று ஒரு வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்திரவாசமோ இருப்பது கூடாதென்றூம் கருதி வந்ததுண்டு. அதற்கு வேறு எந்த தடையும் இருந்திருக்கவில்லை என்றாலும் நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தாள். இப்போது அந்தத் தடை இல்லாது போனது ஒரு மகிழ்ச்சிக்குரியக் காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையே தருவதாகும்”
*
இதுதான் பெரியார்… வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே சிந்தித்த உண்மையான மகாத்மா.. தன் இழப்புகள் கூட மக்களுக்கான தன் பயணத்திற்கு ஒரு வசதி என்று நினைத்தவர் பெரியார். அதைத் திரிப்பவர்களெல்லாம் வக்கிரங்கள் பீடிக்கப்பட்ட மனநோயாளிகள். அவர்கள் முறையான சிகிச்சை பெற்று நலவாழ்வு வாழவேண்டும் என்பதே என் அவா
**நன்றி**
குடி அரசு 14.5.33
”ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்”- என்.ராமகிருஷ்ணன்