‘நட்சத்திரவாரம்’ பகுப்புக்கான தொகுப்பு

நட்சத்திர வாரம் எப்படி

என் நட்சத்திர வாரம்

என் நட்சத்திர வாரம் எப்படி

ஏமாற்றமே
பரவாயில்லை
நன்று
சிறப்பாக இருந்தது
எதிர்பார்த்த அளவிற்கு இல்லை

Current Results

நட்சத்திர வாரம் எப்படி

என் நட்சத்திர வாரம்

என் நட்சத்திர வாரம் எப்படி

ஏமாற்றமே
பரவாயில்லை
நன்று
சிறப்பாக இருந்தது
எதிர்பார்த்த அளவிற்கு இல்லை

Current Results

*நட்சத்திரம்* – ஆகஸ்ட் 5, அண்ணன் அறிவுமதியுடன்

சென்ற முறை விடுமுறைக்காக தாயகம் சென்ற போது அண்ணன் அறிவுமதி அவர்களைச் சந்தித்தேன். அவருடனான சந்திப்பு என் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கிறது.

பாசத்தோடு தம்பி, தம்பி என அவரழைக்கும் போதெல்லாம் எனக்குள் எப்போதுமில்லாத இனிமையான அதிர்வுகள்.

மதுரையிலிருந்து ஆகஸ்ட் 4 ம் தேதி காலையில் சென்னை சென்றேன். அன்று மாலை 3 மணிக்கு அறிவுமதி அண்ணனை தொடர்பு கொண்டேன். தான் முக்கிய அலுவலில் இருப்பதாகவும் மாலை 6 மணிக்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். நான் அண்ணனுக்கு தொலைபேசி செய்யாமலே மாலை 5 மணிக்கு மாமாவின் இல்லத்திலிருந்து புறப்பட்டு மாம்பலம் ரயில் நிலையமடைந்தேன். சென்னையில் வாங்க வேண்டிய புத்தகங்களை பற்றி இசாக்கும், நண்பணும் பட்டியலிட்டிருந்த மின்னஞ்சலை பிரதியெடுத்துக்கொண்டு அவரது அலுவலக முகவரியான அபிபுல்லா சாலையை விசாரிக்க தொடங்கி நடந்தேன். நடந்தேன். கோடம்பாக்கம் ரயில்நிலையத்தின் கிழக்குப்பகுதியே வந்துவிட்டது. அண்ணனின் அலுவலகமும் அங்குதான்.

அலுவலகம் சென்றால் பூட்டிக் கிடந்தது. இப்போதுதான் கிளம்பிப் போனார் என்று சொன்னார்கள். எனக்கு மிகுந்த ஏமாற்றமாகி விட்டது. அண்ணனை மறுபடியும் தொலைபேசியில் அழைத்தேன். மறுநாள் காலை சந்திக்கலாம் என்றார். பிறகு பேராசிரியர் திரு. சுப.வீரபாண்டியன் அவர்களின் வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். சுப.வீ அவர்களே எடுத்தார்கள். அன்புடன் பயணம் பற்றியும் தாய் தந்தையர் நலம் பற்றியும் விசாரித்தார். அன்று முழுவதும் தமிழ் முழக்கம் அலுவலகத்திலே இருந்ததாகவும் மாலையில் திரு. பழ.நெடுமாறன் ஐயாவை சந்தித்துவிட்டு வந்ததையும் கூறினார். அடடா நல்ல வாய்ப்பை நான் இழந்துவிட்டேன் அய்யா என்றேன். சிரித்துக் கொண்டே கண்டிப்பாக நாம் சந்திப்போம் என்றார்.

நான் அண்ணன் அலுவலகத்திற்கு செல்ல அவரும் அப்போது ஆட்டோவிலிருந்து இறங்கிவந்தார். நான் துபாயிலிருந்து வந்திருக்கிறேன் எனச் சொல்ல வாங்க முத்துகுமரன் என்று அழைக்க நான் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனேன். முதலில் எனக்கு லேசாக பிரமிப்பாகயிருந்தாலும் அவரின் இயல்பான பேச்சால் எனக்கிருந்த தயக்கத்தை போக்கிவிட்டார். அவருடனான சந்திப்பு எனக்கு அளவிலாத மகிழ்ச்சியைத் தந்தது, நான் அவரைப் பற்றி கொண்டிருந்த எண்ணங்களைப் பற்றியும் பொதுவான மதிப்பீடுகளையும் தெரிவித்தேன். அவரிடம் நாங்கள் வாங்க திட்டமிட்டிருந்த புத்தகங்களைப்பற்றி அவரின் கருத்துகளையும் கேட்டேன். எல்லாம் நல்ல புத்தகங்கள்தான் என்றும் மேலும் சில புத்தகங்களையும் சொன்னார்.நான் குறித்துக் கொண்டேன். பெரும்பாலான புத்தகங்கள் நீயு உட்லேண்ஸ் புத்தக கடையிலே கிடைக்குமென்றும் பத்து சதவீதமாது கழிவு கொடுத்தால் மட்டும் வாங்கு என்றார். நானும் சரி அண்ணா என்று சொன்னேன்.

அப்புறம் தமிழைப் பற்றியும் இன்றைய சூழல்களைப் பற்றியும் எனது எண்ணங்களை அவரோடு பகிர்ந்து கொண்டேன். எல்லா வற்றறயும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு அவ்வப்போது எனது ஐயங்களையும் தெளிவுபடுத்தினார்.

அவருடைய நீலம் குறும்படத்தை பற்றியான லயோலா கல்லூரி மாணவர்களுடன் கலந்தாய்வு இருப்பதால் நான் அங்கு செல்கிறேன், நீ புத்தகங்கள் வாங்கிய பின் என்னைத் தொடர்பு கொள் நானும் அதற்குள் வந்துவிடெவேன் என்று சொல்லிவிட்டு அவருடைய உதவியாளரையும் என்னுடன் புத்தகக் கடடக்கு அனுப்பி வைத்ததர்.

ஏற்கனவே வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் இருந்ததால் எனது பணி எளிதாக இருந்தது. ஒரு சில புத்தகங்கள் இல்லை. அவைகளை புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகங்களிலிருந்து வரவழைத்து தந்தார்கள். இலக்கியம் தொடர்பான திறனாய்வு புத்தகங்கள், கவிதைப் புத்தகங்கள் என நிறையய வாங்கினேன். நான் திரைக்கதை புத்தகங்கள் ( உதிரிப்பூக்கள், பாரதிகண்ணம்மா, த்ரோன் ஆப் பிளட் ) ஆகிய புத்தகங்களும், நடுகற்கள் என்ற புத்தகமும் வாங்கினேன். எல்லாவற்றையும் ஒரு பெரிய மூட்டையாக கட்டிக் கொண்டு மறுபடியும் அண்ணன் தொலைபேசி எண்ணுக்கு அழைத்தேன், அலுவலகத்தில்தான் இருப்பதாகவும் அதனால் நீ வா என்றார்.

மெதுவாக பேச ஆரம்பித்தேன். இளவேனில் கால பஞ்சமி பாடலிலிருந்தே உங்கள் கவிதைகளின் ரசிகன் என்றேன். நீங்கள் காதல் புத்தகம் என்ற படத்திற்கு எழுதிய கவிதைகளை விளம்பரங்களில் பார்த்திருக்கிறேன், அப்போதே எனக்கு உங்கள் எழுத்துகளை பிடிக்கும் என்றேன் . அப்படியே வெளிவரயிருக்கிற எனது ” தீபங்கள் பேசும்” கவிதை தொகுப்பை பற்றி பேசிவிட்டு அவரது நட்புக்காலம் கவிதை தொகுப்பு எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றியும் சொன்னேன். அது ஒரு நாள் இரவில் எழுதினதுடா தம்பி என்று சொன்னார்.

பல இளம் கவிஞர்களுக்கு தாயாய் இருக்கும் அவரது அன்பினாலே ஏராளமானவர்கள் தங்கள் கவிதைகளைக் கொடுத்து அவரின் கருத்துகளை அறிய காத்திருப்பதை அவரது அலுவலகத்தில் வந்து சேர்ந்திருந்த கவிதை தொகுப்புகளிலிருந்து உணர முடிந்தது. ஆனால் இந்த அன்பு பிணைப்பே அவர் எழுத்துக்கு மிகப் பெரிய தடையாய் இருப்பதாக அவர் எதேச்சையாகச் சொல்ல எனது தொகுப்பை பற்றிய கருத்துகளை நான் வற்புறுத்திக் கேட்கவில்லை. அவரது உள்ளம் அத்தனை அன்பு நிறைந்தது. கருத்துக்காக கொடுக்கும் கவிதைகளை மேம்போக்காக வாசித்து சம்பிரதாய வார்த்தைகளை இட்டு பதில் சொல்வதில்லை. ஒவ்வொன்றையும் ரசித்து தனது ஊக்கத்தை தருபவர் அவர்.

” எழுதுங்கடா தம்பி”

என்பதுதான் சந்திக்கும் அனைவரிடமும் அவர் சொல்லக்கூடிய வார்த்தை. அவரரிடம் அண்ணா பல்வேறு கவிதைப் புத்தகங்களை வாசிக்க வாசிக்க எனக்கு ஒருவகையான மிரட்சி வருகிறது. அடிக்கடி நான் எழுதுவதெல்லாம் கவிதைதானா என்ற சந்தேகம் வருகிறது என்றேன். அவர் இதுதான் கவிதை என்று யாரும் தீர்மானிக்க முடியாது. கவிதை புனிதமானது போன்றவற்றை கண்டு அஞ்சாமால் எழுது என்றார். எழுத எழுதத்தான் சிந்தனைகளையும், மொழியையும் கையாளக்கூடிய திறமை வரும், அதனால் எந்த மிரட்சிக்கும் ஆளாகமல் தொடர்ந்து எழுது என்றார்.

சுனாமி பேரழிவை மையமாக வைத்து அவர் இயக்கிய நீலம் குறும்படத்தை பற்றி என் பேச்சு திரும்பியது. நீலம் படத்தின் இரண்டு புகைப்படங்களை காட்டினார். சுனாமியால் உறவுகளை இழந்த ஒரு சிறுவனின் கண்ணீரை வெளிப்படுத்தும் படம் அது. சிறப்பாக இருக்குது அண்ணா என்றேன்.
சிறுவன் அரவிந்த் பச்சான் நன்றாக நடித்திருப்பான் போலிருக்கண்ணா என்றேன். அவரும் ஆமாம் என்றார். மிகச் சிறப்பாக செய்திருக்கிறான் என்றார்.

நான் அவரை சந்திக்க சென்ற அந்த சமயம் அந்தப் படம் தொடர்பாகவும், சுனாமி பாடல்கள் தொகுப்பு சம்பந்தமாகவும் அவர் மிக்கப் பரபரப்பாக இருந்த சூழல் அது. (**சுனாமி பாடல்கள் தற்போது கடலே கடம்மா என்னும் பெயரில் குறுந்தகடுடாக வெளியிடப்பட்டிருக்கிறது. பல்வேறு இசை அமைப்பாளர்களின்(பத்து) ஒத்துழைப்போடு வெளிவந்திருக்கிறது. அத்தனையும் உயிரை உருக்கும், உலுக்கும் பாடல்கள்.** )

ஆனா தமிழ் பத்திரிக்கைகள் இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லையே என்றேன். விருது கிடச்சா எல்லாரும் கேமராவையும், பேப்பரையும் தூக்கிட்டு ஓடி வருவாங்கடா என்றார். குமுதம் மட்டும் செய்தியை போட்டிருந்தது. அருவருக்கத்தக்க ஆபாசங்களை அச்சிலிற்றி, தமிழனின் சிந்தனை உணர்வுகளை காயடிப்பதில் தெளிவாக இயங்கும் இந்த ஊடகங்கள், ஒரு தமிழன் தன் இனம் சந்தித்த மிக கொடூரமான ஒரு பேரழிவை, வரலாற்று துயரை தனது மொழியில் பதிவு செய்திருப்பதை கண்டும் காணாதிருந்ததை நினைத்து எரிச்சல் வந்தது.

ஆனால் அண்ணன் இதையெல்லாம் சுத்தமாக எதிர்பார்ப்பதே இல்லை.

அவரது மொழி சிறிது வளைந்தால் பணத்தை கொட்டிக் கொடுக்க காத்திருக்கிறார்கள். ஆனால் மொழியின் மீதும், இந்த சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள பாசமும், அதை ஒரு கோள்கையாகவே கடைபிடிப்பதையும், அதனால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகளும் ஏராளம். இப்போது ஏன் திரைப்படத்திற்கு பாட்டெழுத மாட்டேன் என்று சொல்கிறீர்கள். திரையுலகில் உங்களைப் போன்றிருக்கும் ஒருசில சிந்தனையாளர்களும் எழுத மறுப்பது எந்த வகை நியாயம் என்று கேட்டேன். அதற்கு சவாலான வாய்ப்புகள் எதுவும் வருவதில்லை. வருவதெல்லாம் ஆபாசத்தை முன்னிறுத்தியும், பெண்களின் அங்கங்களை வர்ணித்து எழுதச் சொல்கிற பாடல்கள்தான். அது மாதிரி எழுத எனக்கு விருப்பமில்லை என்றார். சேதுவில் எங்கே செல்லும் இந்த பாதை எழுதினேன். அது காலம் கடந்தும் என் பெயர் சொல்லும். அது மாதிரி சவாலாக வந்தா கண்டிப்பா எழுதுவேன் என்றார்.

நான் மெதுவாக எனக்கும் திரைப்பட இயக்குனராகும் ஆசை இருக்கிறது என்றேன். நன்கு ஸ்கிரிப்ட் எழுத கற்றுக் கொள் என்றார். யாரிடமாவது உதவி இயக்குனராய் சேர்ந்து எடுபிடி வேலை செய்து, தொழில் கற்று இயக்குனர் ஆக வேண்டும் என்று எண்ணாதே. முறையாக படித்து விட்டு நேரிடையாக வா என்றார். கதை பற்றிய அறிவைப் பெற கிழக்கில் தேடு. தொழில் நுட்ப விசயங்களை மேற்கிலிருந்து பெற்றுக் கொள் என்றார். ஆம் எத்தனையோ வித்தியாசமான கதைகள் படிப்பினைகள் நமக்கு கிழக்கு ஆசியாவிலிருந்து கிடைக்கும் என்பதை மிக எளிமையாகச் சொல்லிவிட்டார்.

இடையில் அவரது தம்பிகள் சிலர் வந்தனர். அவர்களிடமெல்லாம் இவர் இசாக்கின் நண்பர் என அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் வேடிக்கையாக தம்பிகள் கூடிக்கிட்டே போறாங்க என்றனர். நான் சிரித்துக் கொண்டேன். அப்போது துபாயிலிருந்து வந்திருந்த இன்னொரு நண்பரும் வந்து சேர்ந்தார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு தோலைபேசி அழைப்பு.

அது பேராசிரியர் சுப.வீ அவர்களிடமிருந்துதான்…..

அண்ணன் பேசிவிட்டு என்னிடம் கொடுக்க, அடடா நீங்க மதி அலுவலகத்தில் இருக்கிறேன் என்று சொல்லியிருந்தால் நான் வந்து கலந்து கொண்டிருப்பேனே என்றார். நாம் நாளை கண்டிப்பாக சந்திப்போம் என்றார்.

பேசிக்கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. மாலை 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது. உங்களுடனான சந்திப்பு எனக்கு மிகவும் மகிழ்வாய் இருந்தது என்றேன். அவர் சிரித்து கொண்டே வழியனுப்பி வைத்தார்.

சுப. வீ அவர்களுடனான சந்திப்பும் மிக இனிமையான ஒன்றுதான்.

அதைப் பற்றி பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

****

இந்தப் பொங்கல் கவிதை ஆர்வலர்களுக்கும், குறிப்பாக எங்களுக்கு தித்திப்பான சக்கரைப் பொங்கலாகவே அமைந்துவிட்டது. கவிதைகளுக்காகவும், கவிஞர்களுக்காகவும் அண்ணன் ‘‘தை” என்னும் பெயரில் புதிய கவிதை இதழை தை முதல் தேதியிலிருந்து தொடங்கி இருக்கிறார். இதழியல் உலகில் அது சிகரங்களைத் தொடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அண்ணனுக்கு அன்பான வாழ்த்துகள்…….

*நட்சத்திரம்* – பிடித்த கவிதைகள் ஆறு – கவிதை 6

புரிந்து கொள்ளுங்கள்!

புரிந்து கொள்ளுங்கள்-எதிரியைப்
புரிந்து கொள்ளுங்கள்!

சூரியனை அப்பிய முகங்களுக்குள்ளே
சூனிய இருள்கள் புதைந்து கிடைக்கும்
உதட்டில் நெளியும் சாத்வீக மந்திரம்
உள்ளத்தில் ஆயிரம் ஓநாயின் ஓசை

அகிம்சை உறைக்குள் ரத்தவாடை
அமைதிவனத்தில் நச்சுப் பூக்கள்
தருமச் சக்கரம் சுழலும் தடங்களில்
புதையும் மானுட உயிரின் ஓலம்

இதனது முகத்தை எவர் கிழிப்பார்கள்
இவனது தோலை எவர் உரிப்பார்கள்
இந்த எதிரையைப் புரிந்தவர் எவரோ
இந்த வரலாற்றைப் படைப்பவர் அவரே!

-கவிஞர். இன்குலாப்

** ஒவ்வொரு புல்லையும் – இன்குலாப் கவிதைகள், இயல் 4**

*நட்சத்திரம்* – பிடித்த கவிதைகள் ஆறு – கவிதை 5

தேசிய நீரோட்டம்

அணைகளை உடைத்து
கரைகளைத் தகர்த்து
மரங்களைச் சாய்த்து
இதோ
பாய்ந்து வருகிறது
தேசிய நீரோட்டம்

ஏன் விலகி நிற்கிறீர்கள்!
குதியுங்கள்.

நவீன பாவங்களை
கழுவௌவதற்காகவே
புறப்பட்டு வந்த
புண்ணிய தீர்த்தம் இது.

அதோ
சாக்கடைகள் எல்லாம்
இதில்
சங்கமாகிப்
பவித்திரமடைவதை நீங்கள்
பார்க்கவில்லையா?

இதோ தங்கள் தீட்டுத் துணிகளை
இதில்
துவைத்துக்கொள்கிறவர்களை-
தங்கள்
வலையை வீசி இதில்
மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களை-
நீங்கள் பார்க்கவில்லையா?

நீங்கள் மட்டும் ஏன்
விலகி நிற்கிறீர்கள்?

வான் பொய்த்தாலும்
தான் பொய்க்காத
நீரோட்டம் இது
தாகம் தணித்துக்கொள்ளுங்கள்;
வறண்ட வயல்களுக்கு
வாய்க்கால் வெட்டிப் பாய்ச்சுங்கள்.

உங்கள்
கப்பரைகளுக்கு இதனால்
ஞானஸ்நானம் கொடுங்கள்.

உங்கள் தீபங்களை இதில்
மிதந்து போக விட்டுவிடுங்கள்

உங்கள் முகவரிச் சுவடிகளை இதில்
போட்டு விடுங்கள்

உங்கள் கனவுகளின் அஸ்தியை இதில்
கரைத்து விடுங்கள்

உங்கள் ரத்தத்தை
வெளியே கொட்டி விட்டு
இதை நிரப்பிக் கொள்ளுங்கள்

இனி
நீர்களுக்கு
தனி விலாசங்கள் தேவையில்லை

நதிகள் குளங்கள் கிணறுகள்
எல்லாம் மூழ்கிவிட்டன.
கண்ணீரும் மூழ்கிவிட்டது

நீங்களும் மூழ்கிவிடுங்கள்.

கவிக்கோ. அப்துல் ரகுமான்
**சுட்டுவிரல் தொகுப்பிலிருந்து, 3.11.87.**

*நட்சத்திரம்* – பிடித்த கவிதைகள் ஆறு – கவிதை 4

அணுத் திமிர் அடக்கு

சலுகை
வெறு

திணித்தலை
எதிர்

மிரட்டலைச்
சந்தி

அடங்க
மறு

திமிறு
திமிறு

மூச்சு
என்பது
உரிமைக்குப்
பிறகு

-இலட்சியக் கவி. அறிவுமதி
** அணுத் திமிர் அடக்கு தொகுப்பிலிருந்து**

*நட்சத்திரம்* – பிடித்த கவிதைகள் ஆறு – கவிதை 3

காவல்

விழிகள்
நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்களென்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்-

- கவிஞர். மு. மேத்தா

**கண்ணீர் பூக்கள் தொகுப்பிலிருந்து**

*நட்சத்திரம்* – பிடித்த கவிதைகள் ஆறு – கவிதை 2

ஒரு சுயசரிதைக் கவிதை

அன்றொரு நேற்று
‘அருணாச்சலம் பேரன்
லட்சுமி மவன்’

அடுத்தொரு நேற்று
‘சுசி புருசன்’

நேற்றொரு நேற்று
‘சுடர் அப்பா…
கதிர் அப்பா…
கண்மணி அப்பா’

இன்று
காவியா தாத்தா
ஓவியா தாத்தா
அபூர்வா தாத்தா

எனக்கொரு பெயர் இருப்பது
எப்படித் தெரியாமல் போனது
என் தெருக்காரர்களுக்கு…

-கவிஞர் மீரா

**கோடையும் வசந்தமும் தொகுப்பிலிருந்து**

*நட்சத்திரம்*- பிடித்த கவிதைகள் ஆறு – கவிதை 1

மந்தை -

மேடை.

‘தமிழா!
ஆடாய்
மாடாய்
ஆனாயடா…
நீ’
என்றேன்.

கை
தட்டினான்

-”உணர்ச்சிப் பாவலர் காசி.ஆனந்தன்”

(காசி ஆனந்தன் நறுக்குகள் தொகுப்பிலிருந்து )

*நட்சத்திரம்* – வேரோடு பெயர்ந்த உயிர்

வெளியே மழை விட்டிருந்தது.

காலையிலிருந்து பெய்த மழைக்குபிறகு வானம் இப்போதுதான் சற்று வெறித்திருக்கிறது. கையில் குடையை எடுத்துக் கொண்டு நானும் தேனும் பூங்காவிற்கு நடக்கத் தொடங்கினோம். சாலைகள் எல்லாம் ஈரப்பதமாக இருக்க காலை கவனமாக ஊன்றி நடக்க வேண்டியிருந்தது. சாலைகள் மரங்கள் சுவர்கள் எல்லாம் புதுக்குளியலை முடித்த புத்துணர்வோடு பளிச்சென இருந்தன. இந்த பாதையில் நடப்பது 40 வருடங்களாக தொடரும் விசயம். எங்கள் வாழ்க்கையைப் போலவே காலவோட்டத்தில் இந்தச் சாலையின் மாற்றங்களும் ஏராளம். நாங்கள் வரும் போது இது சின்னத் தோட்டமும் கொஞ்சம் காலிமனையும் உள்ள வீடாக இருந்தது. இன்றுநெரிசல்களால் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.

தேனு, செந்தில் போன் பண்ணினா?.

எப்ப ஊர்ல இருந்து வர்றேன்னு எதுவும் சொன்னானா? மருமக, பேரன் எல்லாம் சொகந்தானா?

எல்லாம் சொகந்தானாம். அவனுக்கு இப்ப வேல கொஞ்சம் அதிகம். இன்னும் ஒரு மாசந்தான, பொங்கலை ஒட்டி வந்தா சேர்ந்த மாதிரி நாளுஞ்சு நாளைக்கு இருக்கலாம்ன்னு சொன்னான், அப்புறம் எம்பேரந்தான் பள்ளிக்கூடத்தில பர்ஸ்ட் ரேங்காம், ஸ்கூல் டீச்சரெல்லாம் அவளப் பத்தித்தான் பேசிக்கிறாங்களாம், சொல்லும் போதே தேனுவின் முகம் சந்தோசத்தில் பூரித்தது.

வாங்கய்யா, வாங்கம்மா, பூங்காவிற்கு அருகில் பூ விற்கும் ரஞ்சிதத்தின் கணீர் குரல். செளக்கியங்களா, நல்ல செளக்கியம்தான். 100மல்லிகைப்பூ கொடுத்தா. மறக்காமா பொங்க நாள்ல வீட்டு வந்து பூ கொடுத்திடு. அப்புறம் மல்லிகைப்பூ, கனகாம்பரம் எல்லா சேத்து எடுத்திட்டு வா. ஊர்ல இருந்து மருமக பேரன்லாம் வர்றாங்க.சரிம்மா. நான் கடைக்கு வர்றப்ப அப்படியே வீட்ல கொடுத்திட்டு வந்திடறேன்.

இருவரும் பூங்காவின் பெரிய அரச மரத்திற்கு கீழிருக்கும் அந்த மூலை பெஞ்சை நோக்கி நடந்தோம். எனக்கு ரெம்ப பிடித்த மரம். விவரம் தெரிந்ததிலிருந்து அதற்கும் எனக்கும் ஏதோ ஒரு உறவு இறுக்கமாக இருக்கிறது.பலமுறை அதன் நிழலில் இளைப்பாறியிருக்கிறேன். தேனுவோடு பலமுறை இங்கு வந்திருக்கிறேன். என் கவலைகள் மறந்திருக்கிறேன். இப்பவும் பேரனை கூட்டி வந்து விளையாட்டு காட்டினது, அவங்கூட ஓடியாடி, ஒளிஞ்சு விளையாண்டது எல்லாம் இந்த மரத்தை சுத்திதான்.என்ன உங்க சிநேகதருகூட எதுவும் பேசலையா, மரத்தையும் என்னையும் பார்த்து கிண்டலடித்தாள். போறப்ப பேசிக்க வேண்டியதுதான். சரி ஈரமா இருக்கு நான் துண்ட விரிக்கிறேன், அப்புறமா உக்காரு.

தேனு, உனக்கு பொங்கலப்ப வேலை அதிகமாகப்போகுது, எல்லாத்தையும் இழுத்து போட்டுகிட்டு செஞ்சா ஒத்துக்குமா? அப்புறம் மூட்டு வலிக்குது , இடுப்பு வலிக்குதுன்னு சொல்லப் போற?

என்ன பேசுறீங்க, ஜீவன் இருக்கும் வரை உழைக்கபோறேன், மருமவதான் கூடமாட ஒத்தாசை பண்ணுவாள அப்புறம் என்ன. எம்புள்ளைங்களுக்கு செய்யுறதுனால நோவுன்னு ஒன்னும் சொல்ல மாட்டேன்?

ம் நல்ல மாமியார்தான். விட்டுக் கொடுக்காம பேசுறியே. அதுக்குதான் தூரத்தில இருக்கிறது எப்பவுமே நல்லது.

அடடா, வயசாயிட்டாலே என்ன பேசுறோம்ன்னு தெரியாதா உங்களுக்கு?

நான் சிரித்தேன்.

என்ன சிரிக்கிறீங்க.

இல்லை கல்யாணமான புதுசுல உன்னை அடிக்கடி சீண்டுவேன் ஞாபகம் இருக்கா? கோவத்துலதான் நீ ரொம்ப அழகா இருப்ப, அதை ரசிக்கத்தான்அப்படி செய்வேன். அது மாதிரித்தா இப்பவும் நீ அழகா இருக்க…

அட ராமா, விவஸ்தையே கிடையாதா, எந்த வயசில எதை பேசனும்ன்னு,
இது என்னடி புதுக்கூத்தா இருக்கு, எம்பொண்டாட்டி அழகுன்னு நான் சொன்னா தப்பா? அறுபதாம் கல்யாணம் முடிஞ்சு இரண்டு வருசந்தானடி ஆகுது.நான் இன்னும் புது மாப்பிள்ளைதான்.

சரி சரி போதும் உங்க ராமயணம். இந்த வாட்டியும் பேரனை கூட்டிக்கிட்டு இதே பூங்காவுக்கு வராம வேற இடங்களுக்கெல்லாம் கூட்டிட்டு போங்க
சரி ஆத்தா, நேரம் ஆயிடுச்சு, இருட்ட ஆரம்பிச்சிடுச்சு, நாம புறப்படலாம்.
அதிகம் பேசாமலே வீடு வந்து சேர்ந்தோம்.

மழை திரும்பவும் வலுவாக பெய்ய மார்கழி குளிர் இன்னும் அதிகமாக வாட்ட ஆரம்பித்துவிட்டது இந்த வருசம் ரெம்ப ஜாஸ்திதான். ஸ்வெட்டர் போட்டும் நல்ல குளிர். கம்பளியை போர்த்திக் கொண்டு தூங்கினோம். காலிங் பெல் அடிக்க, முழிப்பு வந்தது, பால்காரன் வந்துட்டானா என்றவாரே அடுப்படியிலிருந்து பால்பாத்திரத்தை எடுத்து கொண்டு போனேன்.
தேனு நன்றாக தூங்கி கொண்டிருந்தாள்

பாவம் ரெம்ப அசதி போல இருக்கு, விலகியிருந்த போர்வையை நன்கு போர்த்தி விட்டு நானும் மறுபடியும் படுத்துக் கொண்டேன்.
குட்டித் தூக்கம் முடித்து எழுந்த போதும் எழுந்திருக்கவில்லை

தேனு, தேனு,

என்ன உடம்புக்கெதுவும் சொகமில்லையா, இவ்வளவு நேரம் தூங்க மாட்டியே, அவளிடம் பதிலேதும் இல்லை. எனக்கு அடிவயிறு பிசைய ஆரம்பித்துவிட்டது என்னம்மா என்னாச்சு என்று தலையில் கை வைத்து பார்த்தேன். உடம்பு ஜில்லுன்னு இருக்கே.எனக்குள் பதட்டமாக மூக்கின் அருகே விரலை கொண்டு போனேன், என் இதயம் நின்று விட்டது. அவளிடம் மூச்சு இல்லை. இருக்காது தேனு, உனக்கும் ஒன்னும் இல்ல, இரு இப்பவே நான் டாக்டரை கூட்டிட்டு வரேன், என்உதடுகள் உளரத் தொடங்கின. ற்கும் அவசியமில்லாது போல் உன் இறுதி தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாய்.

போர்வையை விளக்கி அவள் தலையை என் மடியில் வைத்துக் கொண்டேன். உங்கள்ட்ட சொல்லாம எதாவது செஞ்சிருக்கேனான்னு சொல்லுவியே, இதை மட்டும் ஏம்ம சொல்லாம செஞ்ச, ஏன் என்கிட்ட சொல்லிட்டு போகுறதுக்கு ஒன்னுமே இல்லையா? எம் மேல அப்படி என்னமா கோபம் உனக்குதலையில் அடித்து கொண்டேன். உண்மையை மறுக்க முடியாது. நீ என்னை விட்டு போயிட்ட, என்னை விட்டுட்டு போயிட்டியே?தள்ளாடியபடியே எழந்து செந்திலுக்கு சேதியைச் சொன்னேன்.

செந்திலும் மருமகளும், பேத்தியும் வந்து சேர, எல்லாக் காரியங்களும் நடக்கத் தொடங்கியது. பாவம் பேரன்தான் ரெம்ப ரெம்ப அழுதுதீர்த்து விட்டான்.பாட்டி திரும்ப வரமாட்டாங்களா சொல்லுதாத்தா, சொல்லு என்றவனை பதிலில்லாமல் என்னோடு இறுக அணைத்து கொண்டேன்.

நேற்று இருவரும் சேர்ந்து போன அதே சாலையில் இன்றும் பயணம்.

இன்று அவள் மட்டும் அலங்காரமாய், ரதத்தில்

பூங்காவைக் கடந்த போது பேரன் சொன்னான்.

தாத்தா உம் மரம் சாஞ்சி கெடக்கு.

ஆமாண்டா,

என் உயிர்தான் வேரோடு பெயர்ந்து என்னை விட்டு போயிட்டிருக்கே….

அடுத்த பக்கம் »