‘சிறுகதை’ பகுப்புக்கான தொகுப்பு

அம்முலு பூனை

இருள் கவிந்திருந்த இரவுப்பொழுதில் விடாது மழை பெய்து கொண்டே இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகளைத் தவிர நிறைந்து காணப்பட்ட மரங்கள் எல்லாம் புதுமழையில் நனைந்து புத்துணர்ச்சியோடு காற்று வீசிக்கொண்டிருந்தது.

எண்களாக இல்லாமல் வீடுகளின் பெயர்களாலே அடையாளம் காணப்படும் மரங்கள் அடர்ந்த பசுமை நகரம்.பெய்த மழையில் மின்சாரம் தடைபட்டிருக்க விளக்கு வெளிச்சத்தில் விழித்துக் கொண்டிருந்தது கோவில் தெரு பிருந்தாவனம் வீடு. பக்கத்துவீடு உறக்கத்திற்கு சென்றுவிட ஒருவிதமான கலவர முகத்தோடு கீதா! ஓயாத பூனை உறுமல். முதன்முறையாய் இந்த அகால நேரத்தனிமை. இருளின் சூழலில் எந்த புதிய ஒலியும் அச்சமூட்டுவதாகவே இருக்கிறது.

ஏதோ சிந்தனையிலிருந்தவளை தொலைபேசி மணி அழைப்பு கலைத்தது.

கீதா! கணவனின் குரல்,
எப்ப வருவீங்க?
வழியெல்லாம் மழை, நான் வர இன்னும் கொஞ்ச நேரம் ஆகும், காத்திருக்காத!
நீ தூங்கிடுமா.
சரிங்க! ஏமாற்றமாகிப்போனது கீதாவிற்கு.

பயந்த சுபாவமான கீதாவிற்கு இந்த அனுபவம் புதிதாகவும் சிரமமாகவும் இருந்தது. விடாது பாடிய சுவாமி பாடல்கள் அவளுக்கு ஒரு தைரியியத்தை கொடுப்பதாக இருந்தது.

மாடி அறையிலிருந்து உர் உர் என உறுமல் சத்தம்! ஒரு மாதமாக வாசம் செய்யும் பூனையின் சத்தமது. இரவின் இருளும் தனிமையும் படபடப்பை அதிகரிக்க தானிருந்த அறையினை தாழிட்டு படுத்துக்கொண்டாள்.

புதிதாக இரண்டு பூனைகளை பிரசவித்திருந்த பூனை தூங்காது உறூமிக்கொண்டே இருந்தது. உறங்கிவிட்ட பக்கத்து வீட்டுக்காரர்களின் பூனைக்கு கீதாவின் மாடி வசதியாக விட்டது. பகலில் மாடிக்குப் போகும் போதும் கீதாவை பார்த்து உறும, மாடிக்கு போவதையே தவிர்த்து வந்தாள் கீதா!. பூனை மீது பயம் என்றாலும் குட்டிப்பூனைகளை கண்டுவிட ஒரு ஆவல் அவளுக்குள்.

விடிந்ததும் ஜன்னல் வழியாக தாய்ப்பூனை வெளியே சென்று விட்டது. வீட்டு வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு மாடிக்கு போனாள் கீதா. இரண்டு குட்டியும் நன்கு தூங்கிக்கொண்டிருந்தது. சாம்பல் வெள்ளை நிறத்தில் ஒன்றும் கருப்பு வெள்ளை நிறத்தில் ஒன்றும் இருந்தன. தூரத்திலிருந்தே பார்த்தாள் அதுவும் தாய்ப்பூனையின் உறுமல் ஏதும் இல்லாத தைரியத்தில்.

எப்போதும் ஒரு மெல்லிய, இனிமையான உணர்வு ததும்பி இருக்கும்படி வைத்துக்கொண்டாள் அவள் வீட்டை. வீணையும், பாட்டும் தெரிந்திருந்தால், அந்த பகுதி குழந்தகளுக்கு சொல்லிக் கொடுத்து வந்தாள். எப்போதும் இருபது பேருக்கு குறையாதிருக்கும் அவளது வகுப்பில்.
கண்டிப்பும் கனிவும் இருப்பதால் குழந்தைகளுக்கும் அவள் மேல் பிரியம். விளையாடி விட்டு அப்படியே வகுப்புக்கு வேர்வை வழிய வரும் பிள்ளைகளை தன்னருகே அழைத்து, சேலைத்தலைப்பால் துடைத்து விடுவாள். ஏதோ ஒரு திருப்தி கிடைப்பதாக உணர்வு அவளுக்கு இப்படிச் செய்யும் போதெல்லாம்.

மாடிக்குப் போகும் போதெல்லாம் சில நிமிடம் பூனைக்காக செலவளிக்க ஆரம்பித்துவிட்டாள். முதன் முதலாக குட்டிப்பூனை கண் திறந்து பார்க்கையில் அவளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. அருகில் போகாமல் தூரத்திலிருந்தே பூனையின் அசைவினை ரசித்து விட்டு போனாள். இந்த புது அனுபவம் அவளுக்கு மகிழ்வைத் தந்திருந்தது

ஒருநாள் தாய்ப்பூனை குட்டிகளை எல்லாம் தூக்கிக் கொண்டு அடுத்த வீட்டுக்கு போய்விட்டது. பிரசவம் பார்க்க மட்டும் நம்ம வீட்டுக்கு வந்திருக்கு போல இந்த பூனை என்று நினைத்தவாறே வேலையில் ஆழ்ந்தாள். உறுமும் பூனை போய்விட்டதால் இனி பயமில்லை என்று மகிழ்ந்தாலும், அந்த குட்டி பூனைகளை பார்க்க முடியாது என்பது ஒரு விதமாய் அழுத்தியதாலோ என்னவோ சட்டென்று முகம் வாடிவிட்டது.

மாடிக்குப் போகும் பேதெல்லாம் பூனையிருந்த தடங்களின் மீது அவள் கண் படாதிருந்ததே இல்லை. மாதம் ஒன்று ஓடிவிட்டது. இரண்டு குட்டியில் ஒரு குட்டி காணமல் போய்விட்டது, சாம்பல் நிற குட்டி மட்டும் இருந்தது. ஏதோ சிறு குழந்தை சத்தம் போல் கேட்க கதவை திறந்து வந்து பார்த்தாள். குட்டி பூனை தனியாக வாசற்படியருகே நின்றது. அதன் சாந்தமான முகம் பூனைகள் குறித்தான அவள் அச்சத்தை நீக்குவதை போல இருந்தது. மிகவும் சிறியதாக கையளவே முகம் கொண்டிருந்த பூனைக்குட்டியை பார்த்ததுமே ஒரு சந்தோசம் அவளுக்குள் அது சன்ன குரலில் மியாவ் மியாவ் என சொல்ல மழலைச் சொல் கேட்டது போன்றே பூரிப்பு. சமயலறையிலிருந்து பால் கொண்டு வந்து சிறிய கிண்ணத்தில் வைத்து கொடுத்தாள். குட்டிப்பூனை அதை சமர்த்தாக குடித்தது.

இன்னிக்கு குட்டிப்பூனைக்கு பால் கொடுத்த்தேன். அப்படியே குடிச்சிட்டது. குழந்தை போல கீதா விவரிக்க புன்முறுவலுடன் கேட்டுக்கொண்டிருந்தான் அவள் கணவன்.

குட்டிப்பூனைக்கு இப்போது தினந்தோறும் பால் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. பசியெடுத்தால் கதவருகே வந்து மியாவ் மியாவ் என சத்தம் கொடுக்கும். பூனையின் மொழி அவளுக்கு புரியத் தொடங்கிவிட்டது. பால் குடித்து பழகிவிட்ட குட்டிப்பூனை அவள் அருகே வந்து வாலை ஆட்டிக் கொண்டு நின்றது. குட்டிப்பூனையின் ரோமங்கள் அழகாக மெதுமெதுவென்று இருக்க அதைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டாள். வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு பூனையின் வாலருகே கையை கொண்டு போனாள். குட்டி எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மெளனமாய் இருக்க ஒற்றை விரலால் வாலை நீவீ விட்டாள். மிக மிருதுவான வால், இங்கும் அங்கும் ஆடிக்கொண்டிருந்தது. குட்டிப்பூனை அவளின் பயம் போக்கி ஒரு நேசம் விதைத்திருந்தது. ஒரு வாரத்தில் குட்டிபூனையின் முதுகைத் தடவித்தரும் அளவிற்கு சிநேகம் வளர்ந்து விட்டது.


காலை டீயூசன் ஆரம்பிக்கும் முன் வாசலுக்கு வருவாள். அதே நேரம் சரியாக குட்டிப்பூனை புதிதாக பிறந்த இன்னொரு பூனையோடு வந்து விளையாட ஆரம்பித்துவிடும். ஆட்டம் முடிந்து களைப்பு வந்தவுடன் ஒரு பார்வை இவளைப்பார்த்து. அதன் பார்வையை புரிந்து கொண்டு அவளும் பால் ஊற்றிவிடுவாள். கொலுசு சத்தம் கேட்டவுடன் குட்டிப்பூனை ஓடி இவளருகே வர இவளுக்கோ பேரானந்தம், குட்டிப்பூனையோடு சேர்ந்து அவளுடைய வயது பின்னோக்கி போனது.

வீட்டுக்காரர்கள் பூனைக்கு அசைவ உணவு போட்டாலும் இப்போது பாலுண்ணுவது தினசரி நிகழ்வாகிப்போனது. டீயூசனுக்கு வந்த சிறுமி பூனையை லாவகமாக தூக்கி மடியில் வைத்து கொஞ்சி விளையாடியது இவளக்குள் ஒரு குதூகலத்தை ஏற்படுத்தியது, இவள் கண்களில் விரிந்த ஆச்சர்யத்தை பார்த்துவிட்டு, என்ன டீச்சர் பூனையை தூக்கணுமா என்று கேட்டாள்.

அவளுக்கு தூக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது, பூனையின் உடம்பு எப்படி இருக்கும், எலும்பு சதை எல்லாம் இவ்வளவு சின்னதா இருக்கே, அதை தூக்கினா வலிக்குமா, எப்படி பிடிக்கணும்னு தெரியாதே, துள்ளி ஓடிடுமா என ஏராளமாய் மனதிற்குள் ஓட, அவள் கைகளில் பூனையை கொடுத்தாள். இலவம் பஞ்சு போல மேனி, பொசுபொசுவென்று அழகிய ரோமம், மெல்ல தடவிப்பார்க்கையில் தட்டுப்படும் எலும்பு, முதன் முதலாய் பூனையை தூக்கி வைத்திருப்பது அவளுக்கு மகிழ்வையும், வீரத்தையும் தந்தது போல கலவையான உணர்வைத் தந்தது. அம்முலு என்றாள். வெடுக்கென்று குட்டீப்பூனை திரும்பி பார்த்தது. அம்முலு அம்முலு என்று ஒவ்வொரு முறை கூப்பிடும் போது திரும்பி பார்த்தது அவளிடம் ஓடி வந்தது.

வீட்டு வேலைக்கு வந்திருந்த பெண்ணிற்கு வீட்டு பின்புறத்திலுல்ள முருங்கை மரத்திரலிருந்து ஐந்தாறு முருங்கைகாய்களை பறித்து தந்தாள். நீண்ட நாட்களாக கீதாவிடம் வம்பளக்க வாய்ப்பு தேடியவளுக்கு இதைப் பார்த்துகொண்டிருந்த வீட்டுகாரி எப்படி நீ அவளுக்கு தரலாம் என்று சண்டைக்கு வந்துவிட்டாள், அதிர்ந்து பேசிடாதா கீதாவிற்கு குரலுயர்த்தி பேசும் வீட்டுக்காரியின் பேச்சு கோவத்தை ஏற்படுத்திவிட்டது. அவளுக்கு தந்ததால் என்ன என்றூ திருப்பிக்கேட்க, பாட்டு சொல்லி கொடுக்கிற டீச்சருக்கு எப்படி நடந்துகிணம்னு தெரியலையே என கண்டபடி பொரிந்து தள்ளிவிட தாளாத வேதனை. மூதாதையர்களும் அவளது வசைபாடலில் தப்பவில்லை,

வீட்டுக்காரியின் ஆவேச பேச்சு கீதாவுக்குள் ரணத்தை ஏற்படுத்தி விட்டது. பத்து வருசமா இதே வீட்டில் இருந்தாலும் எந்த சச்சரவுக்குள்ளும் தலையிடாத தனக்கு நேர்ந்ததை எண்ணி வேதனையில் அமிழ்ந்து போனாள்.

மறுநாள் காலை டீயூசன் சீக்கிரம் ஆரம்பித்துவிட அம்முலு வாசலைச் சுத்தி வந்து எட்டிப்பார்த்தது, உள்ளே கீதா பாடம் நடத்திக்கொண்டிருக்க வாசலில் படுத்துகொண்டு காத்திருந்தது அவள் வருகைக்காக. எட்டு வருடங்களாக அருகருகே குடியிருந்தும் தன்னை புரிந்து கொள்ளத வீட்டுக்காரிக்கும், பிறந்து கொஞ்ச நாளே ஆனாலும் வகுப்பெடுப்பது தெரிந்து முழுமையாக இரண்டு மணி நேரம் வகுப்பு முடியும் வரை சத்தம் ஏதும் கொடுக்காமல் காத்திருந்த அம்முலு அவளுக்குள் ஏராளமான செய்திகளை சொல்லியாதாக உணர்ந்தாள்.

எந்த சச்சரவுகளும் இல்லாதது போலவே கீதாவின் காலைச்சுற்றிக் கொண்டு விளையாடிக்கொண்டிருந்தது அம்முலு பூனை!

காற்றுக் குமிழி – தேன்கூடு போட்டி

பரபரப்பின் உச்சத்திலிருந்தது மருத்துவமனை. வெளிச் சூழல்களால் எதுவும் பாதித்திடாத அமைதியோடு தீவிர சிகிச்சை பிரிவு. உடலில் உயிர் தொடர்வதற்கும் மரணம் வருவதற்கும் இடைப்பட்ட இடம். கண்விழித்திட வேண்டும், ஓரிரு வார்த்தைகளாவது கேட்டிட வேண்டும் என்னும் தவிப்புகளோடும், பிராத்தனைகளோடும் வெளியே கலக்கத்தோடு மனித
முகங்கள். பேரமைதிக்குத் தயார்படுத்தும் ஒத்திகை அறை போல் படுக்கைகளின் மேல் சலனமற்ற நோயாளிகள்.

உயிர்காக்கும் இயந்திரங்களும் அமைதியாக இயங்கிக்கொண்டிருக்க கடிகாரம் மட்டும் அதன் சத்தத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறது. வட்டத்தின் முற்றுப்புள்ளிக்கு அருகே துணையாக என் உயிரும் வந்துகொண்டிருக்கிறது. இந்த சுற்று
எத்தனை நேரத்திற்கென்று தெரியாது.

படுக்க வைக்கப்பட்டிருக்கிறேன் முக்கால் பிணமாக. இயந்திரங்கள் வரையும் படங்கள் சரியாக வருகிறதா என பார்த்துக்கொள்ள ஒரு செவிலி. இருக்கட்டும் என் பயணத்தின் செய்தியை அறிவிக்கக்கூடும். எனக்கோ கழுத்திற்கீழே ஏதும் இருப்பதாய் தெரியவில்லை. இதயம் துடிப்பதால்தான் இருக்கிறேன். ஆனால் இதயம் இருக்கும் இடம் தெரியவில்லை கால்கள், கைகள், உறுப்புகள் எல்லாம் மிதந்து கொண்டிருக்ககூடும். ஆன்மா என்று சொல்கிறார்களே
இப்படித்தான் திரியுமா??

என்ன இது மூளை அதிகமாக சிந்திக்கிறதே. நின்றுவிடப்போவதற்கு முன்னால் அதற்கு எத்தனை வேலைகளோ!

சமுத்திரம் போல கிடக்கிறேன். வெளிப்பார்வைக்கு சலனமில்லாத தோற்றம். உள்ளுக்குள் எண்ணக் குமிழ்களால் நுரைத்துத் ததும்பும் பேரலைகள். ஓயாத அலைகள் அல்ல இவை. நின்றிடப்போகும் அலை.என்ன நடக்க போகிறது எனக்கு?

மெல்ல மெல்ல இதயத்துடிப்பு குறையுமா? பார்வையின் ஒளி மங்குமா? வெளிச்சத்தங்கள் மறைந்து சத்தங்களற்ற அமைதி
தோன்றூமா? உள்ளே வந்து போய்க்கொண்டிருக்கும் மூச்சு நின்றுவிடக்கூடுமா? இதுவரை எத்தனை முறை உள்ளே போய்
வந்திருக்கிறது. ஒவ்வொரு சுவாசத்திற்கும் காத்து மரணமடைந்திருக்கிறதே! அப்போது அதைப்பற்றி கவலைப்படாத மனது
இப்போ நின்னிடுமோன்னு தவிக்குதே! ஏன்?
இன்னும் எவ்வளவு நேரத்திற்கு எனக்கிது புரியும்? பிறகென்னாகும்?
ஒளியமுடியுமா? இல்லை விடுபட முடியுமா? தடுக்க முடியுமா?
எல்லாம் ஒவ்வொன்றாய் நடக்கும்.பிறப்பின் போதே உறுதியான இறப்பும் வரவிருக்கிறது. நிரந்திரமாக வரவிருக்கிறது.

எதுவும் முடியாது. எனது இறுதி இயக்கம் என் கட்டுபாட்டில் இல்லை. நான் பிரபஞ்சத்தின் கட்டுக்குள் போய்க் கொண்டிருக்கிறேன். எனதுயிர் பிரபஞ்ச பெருவெளியில் ஒன்றுமேயில்லாதகப் போகிறது. நான் காற்றோடு கலக்கப்
போகிறேன். சுவாசித்த காற்றின் சுவடுகள் இல்லாததுபோல் நானும் சுவடற்று கரையப் போகிறேன். நிச்சயம் எல்லாம் நடக்கவிருக்கிறது. எல்லோருக்கும் நடந்தது என் அப்பாக்கும் அம்மாவுக்கும் நடந்தது எனக்கும் நடக்கப்போகிறது.

ஓயப்போகும் எண்ண அலைகளின் ஒழுங்கற்ற முட்டல் மோதல் தொடர்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக என் ஞாபக எல்லைகளிலிருந்து எல்லாம் விடுபடுகிறது. சின்ன வயசில் வசித்த கிராமத்து வீடு, சகதியில் விளையாடி கிணற்றில் குளித்து விளையாடிய வயக்காடு, பேச்சுத்துணையாயிருந்து தென்னை மரமும்,
நடந்துபோகும் பள்ளிக்கூட பாதை, இருளப்பசாமி கோயில், கல்லூரி, புதுவீடு எல்லாம் எல்லாம். வீடு முழுசும் நிறைச்சு வச்சிருந்த அமுதனோட பரிசுகள். இப்பத்தான் அவனை கையில் எடுத்து கொஞ்சியது போல இருந்தது. அவன் தூக்கிக் கொஞ்ச பிள்ளையும் வந்துவிட்டது. காலம் ஓடுவதே தெரியாதிருக்கிறது.

ஒன்றுமில்லாத வெற்றிடம் நோக்கி துவங்கிவிட்டது பயணம்.

கண்களின் திரைகளில் உதறமுடியாத உறவுகளின் பிம்பங்கள். ஒளி மங்குமுன் மீண்டுமொருமுறை பார்த்திட வேண்டும். வந்திடுவார்களா? என் துடிப்பை எல்லாம் சொல்லனும் மனசு ஏங்குதே. நாக்கும் மறத்துக்கொண்டிருக்கிறதே. வார்த்தை வருமா?பேச வருமா. வந்தாலும் எவ்வளவு நேரத்திற்கு? கண்ணாலதான் சொல்லனும். ஆனால் கண்ணீர்த்திரை தாண்டி அது போகுமா?

பாதியில விட்டுட்டு போறேனே! பாவம் அமுதன். எப்படித்தான் எல்லாத்தையும் தாங்குவான். இன்னும் எத்தனை நாளுக்கு இங்கிருக்கப்போறேன். இப்போ சுவாசிக்கிற காத்துக்கு விலை இருக்கே! அவந்தானே கொடுக்கணும். கொடுத்திட்டு சிரமப்படுவானே. பொழச்சு முக்காப்பொணமா சிரமப்படுத்தாம போகனும். இங்க வேணாம். வீட்டுல போனும். என் உசிரும்
உழைப்பும் கலந்திருக்கிற வீட்ல போகணும்

விக்கலெடுக்கிறது நிற்காமல்.

உள்ள போயிட்டு வரமுடியாம சிரமப்படுது மூச்சு.

என் சுயநினைவு குறைந்து குறைந்து எல்லாம் மறக்கத் தொடங்குகிறது

**

விமானத்தில் நுழைவதற்கு இறுதி அழைப்பு வர வெறுமையாக நடந்து வருகிறான் அமுதன். மகிழ்ச்சியாக வரும் போதெல்லாம் கிடைக்காத சன்னலோரம் இன்று கிடைத்திருக்கிறது. தளர்வாய் சாய்ந்து கொண்டான். விமான சிப்பந்தகளின் குரல்களேதும் அவனுக்கு கேட்கவில்லை. சன்னல் வழியே பார்க்க மேகம் மிதந்து கொண்டிருக்கிறது. விமானமும் கூட.விமானத்தின் கனமாய் அப்பாவின் நினைவுகள் அழுத்துகிறது. தன்னையறியாது உதடுகள் அப்பா அப்பா என உச்சரிக்கிறது. கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டான்.
எப்படிப்பா அமைதியா இருக்கீங்க. அசையாமலே இருக்கிங்களா? மத்த எல்லாத்தவிடவும் எனக்குத்தெரியும்பா,

என்னைப் படிக்க வைக்க காசுக்காக நடந்தே தேஞ்ச காலும், கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்த கையும், நான் உடஞ்சு போனப்ப ஆறுதலா சாஞ்சுகிட்ட தோளும் அசையாம இருக்கா? எப்படிப்பா அமைதியா இருக்கீங்க. அப்பா எனக்காக எத்தனை சிரமப்பட்டிருக்கீங்க. எனக்கு உயிர் தந்ததே நீங்க தான. இந்த உடம்பும் உங்க உடம்புதாம்பா. அப்பா நான் வந்திடுவேன்.
என்னை விட்டுப் போயிடாதிங்கப்பா. என் கூடவே வச்சுக்குவேன். நான் பார்த்துக்குவேன் உங்களை. நீங்க வேணும்பா. என்ன
செலவானாலும் பரவாயில்லை.

ஆண்டவா அப்பா பொழச்சுக்கணும்!

வேக வேகமாக விமான நிலைத்திலிருந்து வெளிவந்து நேராக மருத்துவமனைக்கு நுழைந்தான். அமரர் ஊர்தி தயாராக
நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பதட்டம் கூடியவனாய் விறுவிறுவென உள்ளே சென்றான். அப்பாக்கு ஒன்னும் ஆயிருக்காது.அப்பா வந்துட்டேன்பா!
தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு வெளியே எல்லோரும் அழுது கொண்டிருக்க ஏதோ விபரீதமாக நடந்துவிட்டது என ஓடினேன்.

உள்ளா பார்த்தால் அப்பாவுக்கு மூச்சுத் திணறல். எவ்வளவோ போராடியும் கட்டுக்குள் வராமல் மெல்ல மெல்ல அடங்கி விட்டது. எனக்கு உயிர்நாடியே ஒடுங்கியது போலிருந்தது.

எதுவும் பேசவில்லை.
இருவரும்
எதுவும் பேசவில்லை

அப்பா இனி இல்லை.

இத்தனை நாள் பார்த்துகிட்டு இருந்தனே. இனிமே எப்பவுமே பாக்க முடியாது.

மரணம்

என் அப்பாவின் மரணம்.

நிமிடமாய் கரைந்துவிட்டது ஓராண்டு…

வாழ்க்கையின் ஓட்டமும்தான்.

மரணம் இழப்புகளைத் தந்தாலும் அது வாழக்கற்றுக் கொடுக்கிறது. இழப்புகளைக் கடந்து வாழும் பக்குவம் மனித இனத்திற்கு
இருக்கிறது.

”எல்லா மரணங்களையும் கடந்து செல்லமுடியும்
நம் மரணத்தைத் தவிர…”

*நட்சத்திரம்* – வேரோடு பெயர்ந்த உயிர்

வெளியே மழை விட்டிருந்தது.

காலையிலிருந்து பெய்த மழைக்குபிறகு வானம் இப்போதுதான் சற்று வெறித்திருக்கிறது. கையில் குடையை எடுத்துக் கொண்டு நானும் தேனும் பூங்காவிற்கு நடக்கத் தொடங்கினோம். சாலைகள் எல்லாம் ஈரப்பதமாக இருக்க காலை கவனமாக ஊன்றி நடக்க வேண்டியிருந்தது. சாலைகள் மரங்கள் சுவர்கள் எல்லாம் புதுக்குளியலை முடித்த புத்துணர்வோடு பளிச்சென இருந்தன. இந்த பாதையில் நடப்பது 40 வருடங்களாக தொடரும் விசயம். எங்கள் வாழ்க்கையைப் போலவே காலவோட்டத்தில் இந்தச் சாலையின் மாற்றங்களும் ஏராளம். நாங்கள் வரும் போது இது சின்னத் தோட்டமும் கொஞ்சம் காலிமனையும் உள்ள வீடாக இருந்தது. இன்றுநெரிசல்களால் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.

தேனு, செந்தில் போன் பண்ணினா?.

எப்ப ஊர்ல இருந்து வர்றேன்னு எதுவும் சொன்னானா? மருமக, பேரன் எல்லாம் சொகந்தானா?

எல்லாம் சொகந்தானாம். அவனுக்கு இப்ப வேல கொஞ்சம் அதிகம். இன்னும் ஒரு மாசந்தான, பொங்கலை ஒட்டி வந்தா சேர்ந்த மாதிரி நாளுஞ்சு நாளைக்கு இருக்கலாம்ன்னு சொன்னான், அப்புறம் எம்பேரந்தான் பள்ளிக்கூடத்தில பர்ஸ்ட் ரேங்காம், ஸ்கூல் டீச்சரெல்லாம் அவளப் பத்தித்தான் பேசிக்கிறாங்களாம், சொல்லும் போதே தேனுவின் முகம் சந்தோசத்தில் பூரித்தது.

வாங்கய்யா, வாங்கம்மா, பூங்காவிற்கு அருகில் பூ விற்கும் ரஞ்சிதத்தின் கணீர் குரல். செளக்கியங்களா, நல்ல செளக்கியம்தான். 100மல்லிகைப்பூ கொடுத்தா. மறக்காமா பொங்க நாள்ல வீட்டு வந்து பூ கொடுத்திடு. அப்புறம் மல்லிகைப்பூ, கனகாம்பரம் எல்லா சேத்து எடுத்திட்டு வா. ஊர்ல இருந்து மருமக பேரன்லாம் வர்றாங்க.சரிம்மா. நான் கடைக்கு வர்றப்ப அப்படியே வீட்ல கொடுத்திட்டு வந்திடறேன்.

இருவரும் பூங்காவின் பெரிய அரச மரத்திற்கு கீழிருக்கும் அந்த மூலை பெஞ்சை நோக்கி நடந்தோம். எனக்கு ரெம்ப பிடித்த மரம். விவரம் தெரிந்ததிலிருந்து அதற்கும் எனக்கும் ஏதோ ஒரு உறவு இறுக்கமாக இருக்கிறது.பலமுறை அதன் நிழலில் இளைப்பாறியிருக்கிறேன். தேனுவோடு பலமுறை இங்கு வந்திருக்கிறேன். என் கவலைகள் மறந்திருக்கிறேன். இப்பவும் பேரனை கூட்டி வந்து விளையாட்டு காட்டினது, அவங்கூட ஓடியாடி, ஒளிஞ்சு விளையாண்டது எல்லாம் இந்த மரத்தை சுத்திதான்.என்ன உங்க சிநேகதருகூட எதுவும் பேசலையா, மரத்தையும் என்னையும் பார்த்து கிண்டலடித்தாள். போறப்ப பேசிக்க வேண்டியதுதான். சரி ஈரமா இருக்கு நான் துண்ட விரிக்கிறேன், அப்புறமா உக்காரு.

தேனு, உனக்கு பொங்கலப்ப வேலை அதிகமாகப்போகுது, எல்லாத்தையும் இழுத்து போட்டுகிட்டு செஞ்சா ஒத்துக்குமா? அப்புறம் மூட்டு வலிக்குது , இடுப்பு வலிக்குதுன்னு சொல்லப் போற?

என்ன பேசுறீங்க, ஜீவன் இருக்கும் வரை உழைக்கபோறேன், மருமவதான் கூடமாட ஒத்தாசை பண்ணுவாள அப்புறம் என்ன. எம்புள்ளைங்களுக்கு செய்யுறதுனால நோவுன்னு ஒன்னும் சொல்ல மாட்டேன்?

ம் நல்ல மாமியார்தான். விட்டுக் கொடுக்காம பேசுறியே. அதுக்குதான் தூரத்தில இருக்கிறது எப்பவுமே நல்லது.

அடடா, வயசாயிட்டாலே என்ன பேசுறோம்ன்னு தெரியாதா உங்களுக்கு?

நான் சிரித்தேன்.

என்ன சிரிக்கிறீங்க.

இல்லை கல்யாணமான புதுசுல உன்னை அடிக்கடி சீண்டுவேன் ஞாபகம் இருக்கா? கோவத்துலதான் நீ ரொம்ப அழகா இருப்ப, அதை ரசிக்கத்தான்அப்படி செய்வேன். அது மாதிரித்தா இப்பவும் நீ அழகா இருக்க…

அட ராமா, விவஸ்தையே கிடையாதா, எந்த வயசில எதை பேசனும்ன்னு,
இது என்னடி புதுக்கூத்தா இருக்கு, எம்பொண்டாட்டி அழகுன்னு நான் சொன்னா தப்பா? அறுபதாம் கல்யாணம் முடிஞ்சு இரண்டு வருசந்தானடி ஆகுது.நான் இன்னும் புது மாப்பிள்ளைதான்.

சரி சரி போதும் உங்க ராமயணம். இந்த வாட்டியும் பேரனை கூட்டிக்கிட்டு இதே பூங்காவுக்கு வராம வேற இடங்களுக்கெல்லாம் கூட்டிட்டு போங்க
சரி ஆத்தா, நேரம் ஆயிடுச்சு, இருட்ட ஆரம்பிச்சிடுச்சு, நாம புறப்படலாம்.
அதிகம் பேசாமலே வீடு வந்து சேர்ந்தோம்.

மழை திரும்பவும் வலுவாக பெய்ய மார்கழி குளிர் இன்னும் அதிகமாக வாட்ட ஆரம்பித்துவிட்டது இந்த வருசம் ரெம்ப ஜாஸ்திதான். ஸ்வெட்டர் போட்டும் நல்ல குளிர். கம்பளியை போர்த்திக் கொண்டு தூங்கினோம். காலிங் பெல் அடிக்க, முழிப்பு வந்தது, பால்காரன் வந்துட்டானா என்றவாரே அடுப்படியிலிருந்து பால்பாத்திரத்தை எடுத்து கொண்டு போனேன்.
தேனு நன்றாக தூங்கி கொண்டிருந்தாள்

பாவம் ரெம்ப அசதி போல இருக்கு, விலகியிருந்த போர்வையை நன்கு போர்த்தி விட்டு நானும் மறுபடியும் படுத்துக் கொண்டேன்.
குட்டித் தூக்கம் முடித்து எழுந்த போதும் எழுந்திருக்கவில்லை

தேனு, தேனு,

என்ன உடம்புக்கெதுவும் சொகமில்லையா, இவ்வளவு நேரம் தூங்க மாட்டியே, அவளிடம் பதிலேதும் இல்லை. எனக்கு அடிவயிறு பிசைய ஆரம்பித்துவிட்டது என்னம்மா என்னாச்சு என்று தலையில் கை வைத்து பார்த்தேன். உடம்பு ஜில்லுன்னு இருக்கே.எனக்குள் பதட்டமாக மூக்கின் அருகே விரலை கொண்டு போனேன், என் இதயம் நின்று விட்டது. அவளிடம் மூச்சு இல்லை. இருக்காது தேனு, உனக்கும் ஒன்னும் இல்ல, இரு இப்பவே நான் டாக்டரை கூட்டிட்டு வரேன், என்உதடுகள் உளரத் தொடங்கின. ற்கும் அவசியமில்லாது போல் உன் இறுதி தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாய்.

போர்வையை விளக்கி அவள் தலையை என் மடியில் வைத்துக் கொண்டேன். உங்கள்ட்ட சொல்லாம எதாவது செஞ்சிருக்கேனான்னு சொல்லுவியே, இதை மட்டும் ஏம்ம சொல்லாம செஞ்ச, ஏன் என்கிட்ட சொல்லிட்டு போகுறதுக்கு ஒன்னுமே இல்லையா? எம் மேல அப்படி என்னமா கோபம் உனக்குதலையில் அடித்து கொண்டேன். உண்மையை மறுக்க முடியாது. நீ என்னை விட்டு போயிட்ட, என்னை விட்டுட்டு போயிட்டியே?தள்ளாடியபடியே எழந்து செந்திலுக்கு சேதியைச் சொன்னேன்.

செந்திலும் மருமகளும், பேத்தியும் வந்து சேர, எல்லாக் காரியங்களும் நடக்கத் தொடங்கியது. பாவம் பேரன்தான் ரெம்ப ரெம்ப அழுதுதீர்த்து விட்டான்.பாட்டி திரும்ப வரமாட்டாங்களா சொல்லுதாத்தா, சொல்லு என்றவனை பதிலில்லாமல் என்னோடு இறுக அணைத்து கொண்டேன்.

நேற்று இருவரும் சேர்ந்து போன அதே சாலையில் இன்றும் பயணம்.

இன்று அவள் மட்டும் அலங்காரமாய், ரதத்தில்

பூங்காவைக் கடந்த போது பேரன் சொன்னான்.

தாத்தா உம் மரம் சாஞ்சி கெடக்கு.

ஆமாண்டா,

என் உயிர்தான் வேரோடு பெயர்ந்து என்னை விட்டு போயிட்டிருக்கே….