‘அறிமுகம்’ பகுப்புக்கான தொகுப்பு

*நட்சத்திரம்* -

வெளிச்சப் புள்ளிகள்
காரிருள் வெளியில்
நட்சத்திரங்கள்.

மொட்டை மாடி, எப்போதுமே மகிழ்ச்சியின் அடையாளம். அலங்காரப் பொருட்களால் அழகு படுத்தப்பட்டிருக்கும்வீட்டை விட மொட்டை மாடி மிகவும் அழகனாது. குறிப்பாக இரவுகளில், பரந்து விரிந்த வான் வெளியைப் தன் கூரையாக விரித்து பால் கிண்ணமாய் நிலவையும், முத்துச் சிதறல்களாய் நட்சத்திரங்களையும் உடுத்தி கொண்டு வேர்வை துடைக்கும் தென்றலோடு வாழும் தருணங்கள் மிக அழகானவை.

தனியாகவோ, கூட்டமாகவோ, எப்படி இருந்தாலும் அங்கே முக்கியமாக நிகழ்வது நிலாப் பார்த்தல் மற்றும் நட்சத்திரங்களை எண்ணுதல். அதிலும் சிறுகுழந்தை போல் விளையாட்டு காட்டி ஓடிச் சொல்லும் நட்சத்திரங்களுடனான உறவு மிக இன்பமானது.

என்ன கதை சொல்ற மாதிரி இருக்கா?

இல்லைங்க.

இந்த வார நட்சத்திரம்(நட்சத்திர பதிவர்) நானாம். (எல்லாம் நேரம்ன்னு சிலர் முணுமுணுக்கிறது கேக்குது:-) )

தமிழர் திருவிழா நாட்களில் எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு என்னை மகிழ்விக்கிறது.

பரவலாக அறிமுகமின்றி இருக்கும் நண்பர்களுக்காக மேடை அமைத்து அவர்கள் உள்ளிருக்கும் தீயை ஊருக்கு அறிவிக்கும் முயற்சி இந்த நட்சத்திர பதிவர் முறை. வாய்ப்பு பெற்ற அத்தனை பேரும் தங்கள் வெளிச்ச வெள்ளத்தை நிரம்பவே பாய்ச்சி இருக்கிறார்கள். தங்கள் இருப்பை அழுத்தமாகவும் அறிவித்து சென்றிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துகள். வரப்போகும் நட்சத்திரங்களுக்கும் எனது வாழ்த்துகள்

வலைப்பூவில் தீவிரமாக இயங்க தொடங்கிய குறுகிய காலத்திற்குள் எனக்கு இந்த வாய்ப்பளித்த தமிழ்மணம் நிர்வாக குழுவினருக்கு நன்றி. இது குறித்து என்னை தொடர்பு கொண்ட மதி கந்தசாமிக்கும், முறையாக அறிவித்த காசிக்கும் நன்றிகள்.

இது ஒரு பெரிய சவால். நட்சத்திரமா மின்னுறது இல்ல.(ஏன்னா நட்சத்திரம் தன்னைப் பொறுத்தவரை எப்போதும் அதன் ஒளியை இழப்பதில்லை. அது பார்ப்பவரை பொறுத்து) தினமும் தொடர்ந்து எழுதுறதுதான். ஒழுங்கா எழுதி விதிகளை காப்பாத்திடுவேன்னு நினைக்கிறேன். (இப்ப பார்த்து அலுவலகத்தில படுத்த ஆரம்பிச்சிட்டாங்க…. )

அதுனால இந்த வாரம் என்னை பொறுத்த வரை நட்சத்திர இரவு வாரம்:-)

ஒரு வாரம் எல்லோரையும் என்னை கவனிக்க வைக்க ஒரு வாய்ப்பு. இதை எப்படி பயன்படுத்துவது, என்ன மாதிரியான விசயங்களை எழுதுவது. எனக்குள் ஏகப்பட்ட சிந்தனைகள் வருகிறது. நிறைய எழுதத்தான் ஆசை.
ஆசைப்படறதுக்காக என் எண்ணத்தை எல்லாம் ஏழு நாளைக்குள்ள எழுதறதுங்கிறது கடினமானது. ஆனா முடிந்தவரை என்னை நிரூபிக்கும்/ விரும்பும் எழுத்துகளாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கடந்த சில நாட்களாக நண்பர்கள் சிலருக்கு ஒரு விதத் தவிப்பு. நான் பரபரப்பிற்காக எழுத ஆரம்பித்திருக்கிறேனோ என்று. நிச்சயம் பரபரப்படைய வேண்டும் என்பதற்காக மலிவான உத்திகளை கையாண்டு எழுதுவதில்லை. இனியும் அவ்வாறு செய்யப் போவதில்லை. என் மனதிற்கு நேர்மை என, உண்மை என படும் எதையும் தயங்காமல் சொல்லுவேன். எந்த காலத்திலும் நடுநிலை என்னும் அயோக்கியதனத்தைச் செய்யமாட்டேன்.

விதையின் பயணம் மென்மையானது அல்ல. கரடு முரடானதுதான். அதுபோலத்தான் கட்டுகளை உடைத்து கொண்டு வருபவன் குரலும். என் நியாயங்களை தயக்கமின்றி எப்போதும் உரத்துச் சொல்லுவேன். மற்றவர் அதை ரசித்தாலும் ரசிக்காவிட்டாலும்.

நான் எத்துனை மென்மையானவன் என்று என்னோடு பழகியிருக்கும், பழகும் நண்பர்களுக்கு தெரியும். அதே மென்மையை எழுத்தில் காட்டவேண்டும் எதிர்பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஆனால் எனக்குள் எல்லைகள்
வைத்திருக்கிறேன். என் எழுத்துகள் கண்ணியமாக இருக்க வேண்டும், நாகரீகமாக இருக்க வேண்டும், உண்மையாக இருக்கவேண்டும். அதே போல் எந்த சூழலிலும் தனிமனித தாக்குதலில் இறங்க மாட்டேன்.

இந்த வாரத்தில் ஒரு கலவையான படைப்புகளாகவே தர எண்ணி இருக்கிறேன். எந்த வித வேடங்களுமின்றி, எந்த வித சாயங்களுமின்றி. கவிதைகள் முதல் கடவுள் வரை என் எண்ணங்களை என் புரிதல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அது மார்கழிப் பனியாகவும் இருக்கலாம். சித்திரை வெயிலாகவும் இருக்கலாம்.

எப்படி இருந்தாலும் உங்கள் இதயம் நனைப்பேன்

என்ற நம்பிக்கை இருக்கிறது

அன்புள்ள
முத்துகுமரன்

என் பார்வையில்

சமுதாயத்தின் நிகழ்வுகளை என் பார்வையில் எப்படிக் காண்கிறேன் என்பதை இந்த வலைப்பூவில் எழுதப்போகிறேன்….

அப்பத்தா

முத்துகுமரன் – அன்பை விரும்பும் மனிதன். மானமும் உணர்வுமுள்ள தமிழன்,

விருப்பங்கள் – கவிதை, கதை, விவாதங்கள், திரைப்பட இயக்கம்,

நண்பர்களே எனது முதல் பதிப்பாக அப்பத்தா கவிதையை பதிக்கிறேன்

இலையுதிர்காலம்..
பாதையெங்கும்
உதிர்ந்த சருகுகள்..
காத்திருக்கிறது
சருகான இலையொன்று
மரத்திலிருந்து மண்ணிற்கு பயணப்பட….

சருகுகள் எல்லாம்
குப்பைகள் அல்ல
அது பசுமையின் பரிணாமம்….

பெண்மையின் தன்மையாய்
செடியாய் இருக்கையிலே
நிழல் தந்தவள் நீ..
வயது பதினான்கில் தாரமாய்
ஆனவள் நீ..

அணைக்காத உன்வீட்டு அடுப்பு…
பிள்ளை சோறு பொங்கிப் பொங்கி
ஈரமான உன் மனது..
சித்தமருந்துகள் அரைத்து அரைத்து
அழகான உன் கைகள்….

உலகின் சுழற்சியில்
துக்கங்களும் நேசம் கொண்டன
உன்னிடம்…
திடீரென்று ஓய்வெடுத்த

உன்னவரின் இதயம்
திசைமாறிய காற்றாய்
உன் வாழ்வு…

ஈன்ற தலைமகனை
மடியெடுத்தாய் மறுபடியும்
சடலமாய்……
உன் சோகம் சொல்ல
முடியாமல் தடுமாறுகிறது
என் தமிழறிவு…

எண்ணிப் பார்க்கிறேன் உன்னுடனான என் நாட்களை……
நீ கூறிய பாட்டிகதை முதல்
கைலாயத்தில் தாத்தாவைப்
பார்த்ததாக கூறிய செய்திவரை…
அவை கற்பனை அல்ல

நீ உணர்ந்த மரணத்திற்குப்பிறகான
வாழ்வது……..

வயது உயர
உயரம்குன்றி
குழந்தையாய் உன் உருவம்
எதை உணர்த்துகிறாய்…..

மறைந்த பார்வை
மறந்த தன்னிலை
குறைந்த உணவு
குழறிய பேச்சு
மரணத்தோடும் வாழ்கிறாயே….

சத்தம் எழும்பா உன்கடைசி உணர்வுகளில்
என்னென்ன நினைக்கிறாய் ….
பிறர் சொல்ல கடினம்தான்..
எனக்கு மட்டும் தெரியும்

உன் மெளனப் பிராத்தனை…..
பேத்திகளின் வயிற்றில்
பிறந்திடவேண்டுமென்ற அந்த,,,,,,,,