‘அப்பத்தா’ பகுப்புக்கான தொகுப்பு

அப்பத்தாவின் ஆத்மா

//மெய்மறந்த நிலையில் வரது ஆழ்மனதில் அவர் மானசீகமாகப் பின்பற்றும் இந்துதருமம் வார்த்தைகளாக வந்து வெளிப்பட்டிருக்கிறது. மெய்மறத்தல் விடுதலை செய்த உண்மை கறுப்புச்சட்டை போட்டு கடவுள் இல்லை என்பவர் தனது அப்பத்தாவின் ஆத்மா அக்காவின் மகளாக மீண்டும் தம்மிடம் வரவேண்டும் என்கிற அவாவாக வெளிப்பட்டு இருக்கிறது.//

கடவுள் இல்லை என்பவர் – ஹரிஹரன் வர்ணத்தை போதிக்கும் கடவுளர்களைத்தான் நான் இல்லை என்று சொல்லியிருக்கிறேன். தன் குழந்தைகளிடமே வேறுபாடு காட்டுபவன் கடவுளாக இருக்க முடியாது. நான்
எனது பிராத்தனைகளை சமர்பித்தது உங்கள் இந்து மத வேதநெறி கடவுளர்களிடம் இல்லை. என் அப்பத்தாவிடம் மட்டுமே. இரண்டுக்கும் அடிப்படை வேறுபாடு உண்டு. முன்னோர் வழிபாட்டில் மிக ஆழமான நம்பிக்கை கொண்டவன் என்பதை சொல்வதில் எனக்கு தயக்கமேதும் இல்லை.

விரிவாக பேசும் முன்னர் சில சுய விளம்பரங்கள்.

என் வலைப்பதிவின் வாசகத்தை படித்திருப்பீர்கள். எங்கும் எதிலும் அன்பையும் நட்பையும் விரும்பும் எளியன். ஆமாம். எல்லா மனிதர்களிடமும் அன்பையும் நட்பையும் தனிப்பட்ட முறையில் விரும்புவேன். இது என்னோடு பழகியவர்களுக்கு மிக தெளிவாக புரியும். மேலும் உறவுகளின் மீது நான் அளவு கடந்த அன்பைக் கொண்டவன். மிகவும் மென்மையான இதயம் என்னுடையது. என் அன்பை பல இடங்களில் வெளிக்காட்டிக் கொள்ளாது இதயத்திலேயே பூட்டி வைத்துக் கொண்டவனும்கூட. அதனால் அவை வெளிப்படுகையில் எந்த விதமான அரிதாரங்களும் இன்றி அப்படியே வெளிப்படும். மேலும் எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை பெண்கள் மீது மிக அதிக மதிப்பு கொண்டவர்கள். பெண்களை, உண்மையான செல்வங்களாக நினைப்பவர்கள். சனாதானம் வகுத்திருக்கும் கீழானவர்களாக பெண்களை நடத்துவது கிடையாது. நாங்கள் எங்கள் சகோதரிகளையோ, எங்கள் வயதை ஒத்த பெண்களையோ விளையாட்டுத்தனமாய் கூட ஏய் என்றெல்லாம் கூப்பிட முடியாது. எந்த பக்கமிருந்து யாருடமிருந்து அறை விழும் என்று தெரியாது

இப்போது அப்பத்தா விசயத்திற்கு வருவோம்.

நான் அந்தக் கவிதை எழுதியது 2004 மத்தியில். அப்போதே உடல்நலம் குன்ற ஆரம்பித்துவிட்டது. நான் எழுதிய கவிதை வரிகளைப்போலவே நாட்களாக நாட்களாக உருவத்தில் சிறியவர்களாகவும் ஆகிக் கொண்டே வந்தார்கள். மரணம் எதிர்பார்த்தது என்றாலும் அதன் இழப்பு மிக ஆழமானது. என் அப்பத்தா வாழ்ந்த வாழ்க்கை அத்தகையது. என் பிராத்தனையை படித்த நீங்கள் கொஞ்ச நேரம் ஒதுக்கி அந்த கவிதையும் வாசித்திருந்தீர்களானால் நன்றாக இருந்திருக்கும். என் எழுத்தகளால் இயன்றவரை என் அப்பத்தாவை அந்தக் கவிதையில் கொண்டு வந்து இருப்பேன். அப்பத்தாவின் மூத்த மகன் ( பெரியப்பா) அவர்களின் மகள்தான் என் அக்கா. எங்கள் வீட்டு முதல் பெண்.
அதனால் அளவு கடந்த பிரியம் அவர்கள் மீது. இப்போது அவர்களீன் பெற்றோர் இருவரும் கிடையாது.

எங்கள் வீட்டில்(எங்கள் வீடு, சித்தப்பாவீடு) பூனைக்குட்டி உண்டு. அது எப்போதும் எங்கள் அப்பாமார்களின் மடியில்தான் இருக்கும் குழந்தையைப் போல. அத்தனை அரவணைப்போடு இருக்கும். அத்துனை ஏக்கம் நிறைந்த வீடு எங்களுடையது. பேரப்பிள்ளைகளை ஏந்தி கொஞ்சி விளையாட வேண்டிய தருணத்தில் அவர்கள் பூனைகளைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்பத்தாவிற்கு இறக்கும் முன்பு எப்படியாவது பேத்திகளின் பிள்ளைகளை பார்த்துவிட வேண்டுமென்று. உடலில் உயிர்மட்டும் வைத்துக்கொண்டு கடைசி இரண்டு ஆண்டுகளை கழித்தார்கள். பாட்டி இறக்கும் நேரம் அக்காவிற்கு மருத்துவம் செய்து கொண்டிருந்தோம். தொடர்ந்து கொண்டிருகிறது இப்போதும்

சமீபத்தில் நான் புதுவீடு வாங்கினேன். பால் காய்ச்சிய அன்று எல்லோரும் புதிய வீட்டில் தங்கினார்கள். நான் மட்டும் தங்கவில்லை. காரணம் என் அக்காவின் குழந்தை அந்த வீட்டில் தவழும் போதுதான் நான் தலைசாய்க்க வேண்டும் என்ற என் எண்ணம்( அக்கா திருமணத்தின் போது மச்சினன் மோதிரம் போட்டவன் நான் – எனவே அவர் குழந்தையின் தாய்மாமன்). என் வீடு என் அக்காவின் தாய்வீடு. வீடு வாங்கியதில் பெற்றோருக்கு அளவு கடந்த மனநிறைவு. ஆனால் எனக்கு என் அக்காவின் குழந்தை தவழ்கையில்தான் வீடு வாங்கியதின் நிறைவு வரும். அப்பத்தா போன்று எல்லோரையும் அரவணைக்கும் வகையாக எங்களை மகிழ்வில் திளைக்க வைக்க அக்காவின் மகளாக வரவேண்டும் என்றேன். சொல்ல வந்தது பிறக்கும் குழந்தை பெண்ணாக பிறக்க வேண்டும். அப்போதுதான் ஒரு மாமன்காரனாய் தொடர்ந்து சீர் செய்து கொண்டே இருக்க முடியும். அது அப்பாத்தா மாதிரியான அன்பானவள் என்றால் மகிழ்விற்கு எல்லையே இல்லை.

என் பிராத்தனை என்ற வார்த்தைக்கு பின்பு பலசூழல் உண்டு. முக்கியமாக உறவுகளற்ற தனிமை. உணர்வு ரீதியான காரணங்கள் உண்டு. நீங்கள் குறிப்பிடும் சனாதான வேதநெறி இந்து தரும வெங்கய உணர்வுகள் கிடையாது

அன்புடன்
முத்துகுமரன்

பி.கு:
தரமற்ற அனானிமஸ் பின்னூட்டங்களுக்கு இந்த பதிவில் அனுமதி கிடையாது.

அப்பத்தாவிற்கு அஞ்சலி

இன்று காலை 8.17, மணி அளவில் எனது அப்பத்தா மரணம் அடைந்தார்கள். நீண்ட காலமாய் உடல்நலன் குன்றியிருந்த அவர்கள் இன்று தனது வாழ்க்கைப்பயணத்தை நிறுத்தி கொண்டுவிட்டார்கள். இந்த நேரத்தில் என் தந்தை என்னிடம் பேசியதுதான் நினைவிற்கு வருகிறது. குமரா என் அம்மா ராணி போல வாழ்ந்தவர்கள் அவர்கள் மரணம் வாடகை வீட்டில் நடக்ககூடாது சொந்த வீட்டில்தான் நடக்க வேண்டும் என்று. தந்தையின் அந்த விருப்பத்தை நிறைவேற்றிய நிறைவில்தான் நான் கலந்து கொள்ளமுடியாத வருத்தத்தை தேற்றிக் கொள்கிறேன். நீண்ட வருடங்களால குழந்தை பேறில்லாமல் இருக்கும் என் அக்காவின் மகளாக மறுபடியும் எங்களிடம் வருவார்கள் என்ற பிராத்தனையோடு என் அஞ்சலிகளை அவர்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். இந்த நேரத்தில் அப்பத்தா பற்றி நான் எழுதிய கவிதையை மட்டும் இங்கு இடுகிறேன்.

வருத்தத்துடன்
முத்துகுமரன்.
*
அப்பத்தா

இலையுதிர்காலம்..
பாதையெங்கும்
உதிர்ந்த சருகுகள்..
காத்திருக்கிறது
சருகான இலையொன்று
மரத்திலிருந்து மண்ணிற்கு பயணப்பட….

சருகுகள் எல்லாம்
குப்பைகள் அல்ல
அது பசுமையின் பரிணாமம்….

பெண்மையின் தன்மையாய்
செடியாய் இருக்கையிலே
நிழல் தந்தவள் நீ..
வயது பதினான்கில் தாரமாய்
ஆனவள் நீ..

அணைக்காத உன்வீட்டு அடுப்பு…
பிள்ளை சோறு பொங்கிப் பொங்கி
ஈரமான உன் மனது..
சித்தமருந்துகள் அரைத்து அரைத்து
அழகான உன் கைகள்….

உலகின் சுழற்சியில்
துக்கங்களும் நேசம் கொண்டன
உன்னிடம்…
திடீரென்று ஓய்வெடுத்த
உன்னவரின் இதயம்
திசைமாறிய காற்றாய்
உன் வாழ்வு…

ஈன்ற தலைமகனை
மடியெடுத்தாய் மறுபடியும்
சடலமாய்……
உன் சோகம் சொல்ல
முடியாமல்
தடுமாறுகிறதுஎன் தமிழறிவு…

எண்ணிப் பார்க்கிறேன் உன்னுடனான என் நாட்களை……
நீ கூறிய பாட்டிகதை முதல்
கைலாயத்தில் தாத்தாவைப்
பார்த்ததாக கூறிய செய்திவரை…
அவை கற்பனை அல்ல
நீ உணர்ந்த மரணத்திற்குப்பிறகான
வாழ்வது……..

வயது உயர
உயரம்குன்றி
குழந்தையாய் உன் உருவம்
எதை உணர்த்துகிறாய்…..

மறைந்த பார்வை
மறந்த தன்னிலை
குறைந்த உணவு
குழறிய பேச்சு
மரணத்தோடும் வாழ்கிறாயே….

சத்தம் எழும்பா உன்கடைசி உணர்வுகளில்
என்னென்ன நினைக்கிறாய் ….
பிறர் சொல்ல கடினம்தான்..
எனக்கு மட்டும் தெரியும்
உன் மெளனப் பிராத்தனை…..
பேத்திகளின் வயிற்றில்
பிறந்திடவேண்டுமென்ற அந்த,,,,,,,,

அப்பத்தா

முத்துகுமரன் – அன்பை விரும்பும் மனிதன். மானமும் உணர்வுமுள்ள தமிழன்,

விருப்பங்கள் – கவிதை, கதை, விவாதங்கள், திரைப்பட இயக்கம்,

நண்பர்களே எனது முதல் பதிப்பாக அப்பத்தா கவிதையை பதிக்கிறேன்

இலையுதிர்காலம்..
பாதையெங்கும்
உதிர்ந்த சருகுகள்..
காத்திருக்கிறது
சருகான இலையொன்று
மரத்திலிருந்து மண்ணிற்கு பயணப்பட….

சருகுகள் எல்லாம்
குப்பைகள் அல்ல
அது பசுமையின் பரிணாமம்….

பெண்மையின் தன்மையாய்
செடியாய் இருக்கையிலே
நிழல் தந்தவள் நீ..
வயது பதினான்கில் தாரமாய்
ஆனவள் நீ..

அணைக்காத உன்வீட்டு அடுப்பு…
பிள்ளை சோறு பொங்கிப் பொங்கி
ஈரமான உன் மனது..
சித்தமருந்துகள் அரைத்து அரைத்து
அழகான உன் கைகள்….

உலகின் சுழற்சியில்
துக்கங்களும் நேசம் கொண்டன
உன்னிடம்…
திடீரென்று ஓய்வெடுத்த

உன்னவரின் இதயம்
திசைமாறிய காற்றாய்
உன் வாழ்வு…

ஈன்ற தலைமகனை
மடியெடுத்தாய் மறுபடியும்
சடலமாய்……
உன் சோகம் சொல்ல
முடியாமல் தடுமாறுகிறது
என் தமிழறிவு…

எண்ணிப் பார்க்கிறேன் உன்னுடனான என் நாட்களை……
நீ கூறிய பாட்டிகதை முதல்
கைலாயத்தில் தாத்தாவைப்
பார்த்ததாக கூறிய செய்திவரை…
அவை கற்பனை அல்ல

நீ உணர்ந்த மரணத்திற்குப்பிறகான
வாழ்வது……..

வயது உயர
உயரம்குன்றி
குழந்தையாய் உன் உருவம்
எதை உணர்த்துகிறாய்…..

மறைந்த பார்வை
மறந்த தன்னிலை
குறைந்த உணவு
குழறிய பேச்சு
மரணத்தோடும் வாழ்கிறாயே….

சத்தம் எழும்பா உன்கடைசி உணர்வுகளில்
என்னென்ன நினைக்கிறாய் ….
பிறர் சொல்ல கடினம்தான்..
எனக்கு மட்டும் தெரியும்

உன் மெளனப் பிராத்தனை…..
பேத்திகளின் வயிற்றில்
பிறந்திடவேண்டுமென்ற அந்த,,,,,,,,